சாய் துர்கா தேஜின் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ படப்பிடிப்பு  நிறைவடைந்தது!

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கும் இத்திரைப்படம், வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று சங்கராந்தி பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் (Post-Production) மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன.இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் வெளியான புதிய போஸ்டரில், சாய் துர்கா தேஜ் ரத்தக் கறைகளுடன் கரடுமுரடான அதிரடித் தோற்றத்தில் கையில் ஆயுதத்துடன் தீப்பிழம்புகளுக்கு நடுவே நடந்து வருவது போல் மிரட்டலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே வெளியான ‘அசுர ஆகமன’ முன்னோட்டக் காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த புதிய போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

இப்படத்திற்காக இந்தோனேசியாவின் மவுண்ட் புரோமோ எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுப் பெரிய அளவிலான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.இப்படத்தில் சாய் துர்கா தேஜுடன் இணைந்து ஐஸ்வர்ய லெட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா மற்றும் ஒரு முன்னணி பாலிவுட் நடிகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் வெற்றிவேல் பழனிச்சாமி ஒளிப்பதிவையும், ‘காந்தாரா’ புகழ் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பையும் கவனித்துள்ளனர். பீட்டர் ஹெய்ன் மற்றும் ராம் லட்சுமணன் உள்ளிட்ட முன்னணி மாஸ்டர்கள் இப்படத்தின் வெறித்தனமான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.