விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்பட விமர்சனம்!

மருந்து விற்பனை பிரதிநிதியாக இருக்கும் விஷால், தனது குடும்பத்திற்காக ஒரு பழைய காரை வாங்குகிறார். அந்த காரால் ஏற்படும் பேராபத்தில் அவரது மனைவியும், மகளும் கொல்லப்படுகிறார்கள். இதற்குத் தன் தந்தைதான் காரணம் என நினைக்கும் விஷால், அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இறுதியில், தந்தை மீதான கோபத்திற்கான பின்னணி என்ன, கொலையாளிகளை விஷால் எப்படிப் பழிவாங்கினார் என்பதே படத்தின் கதையாகும்.

தமிழ் சினிமாவின் வழக்கமான அப்பா-மகன் செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் மசாலா கதையை இயக்குநர் விஷால் கையாண்டுள்ளார். நிஜமான தோற்றத்தில் வரும் விஷாலின் நடிப்பு நன்றாக இருந்தாலும், அப்பா கதாபாத்திரத்திற்காக அவர் போட்டுள்ள மூன்று கெட்டப்புகளும், அவரது செயற்கையான உடல்மொழியும் திரையில் சற்றும் எடுபடவில்லை. நாயகி துஷாரா விஜயன் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். ஆனால், அஞ்சலியின் நடிப்பு ஓவர் ஆக்டிங்காக அமைந்து நெருடலைத் தருகிறது. மற்ற நட்சத்திரங்கள் தங்களுக்குப் பொருந்தாத கதாபாத்திரங்களில் திணிக்கப்பட்டுள்ளது படத்தின் பலவீனம்.

தொழில்நுட்ப ரீதியாக, ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தனின் கேமரா ஆக்‌ஷன் காட்சிகளை மாஸாகப் படமாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையும், பின்னணி இசையும் கமர்ஷியல் படத்திற்கு ஏத்தபடி பலம் சேர்த்துள்ளது. ஆனால், படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் தேவையற்ற காட்சிகளை வெட்டாமல் கோட்டை விட்டுள்ளார். இதன் காரணமாக, படம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கிறது. எந்தவொரு அடிப்படை விஷயத்திலும் கவனம் செலுத்தாமல், பலவீனமான திரைக்கதையுடன் படத்தை இழுவையாகக் கொடுத்துள்ள விஷால், இனி இயக்குவதைத் தள்ளி வைத்துவிட்டு நடிகராகவே தொடரலாம் என்பதே இந்த விமர்சனத்தின் இறுதித் தீர்ப்பு.