சமூக சேவையில் சிறப்பாக செயல்படும் சாக்யா அறக்கட்டளை!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றின்  இரண்டாம் அலையால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. 

இந்தியாவும் நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  இச்சூழலில் சமூக அமைப்புகள் பலவும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அரசுக்கு ஒத்துழைத்தும், ஆதரவற்றோருக்கு உதவியும் வருகிறது. 

அந்த வகையில் நாட்டுப்புறக் கலைஞர்கள்,  திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்கு தம்மால் இயன்ற உதவியைச் செய்து துளிர்விட்டு வளர்கிறது, தமிழகத்தின் மதுரையில் ஓர் அறக்கட்டளை. 

சாக்யா அறக்கட்டளை என்னும் பெயரில் இயங்கும் இது சென்ற ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து ஏராளமான மேடை நடன கலைஞர்கள் திருநங்கைகள் நாட்டுப்புற கலைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங் குடிகள் என பல்வேறு தரப்பினருக்கும் அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவியிருந்தது.

5 நபர்கள் கொண்டு இயங்கிய இந்த அறக்கட்டளை தற்போது இதன் செயல்பாடுகளால் பல்வேறு சமூக சிந்தனையும் ஆர்வமும் கொண்ட மாணவர்களைக் கவர்ந்து 30-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல், பொறியியல் பட்டம் பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு சமூகப் பணியைத் தொடர்கிறது. 

பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் மதுரை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுர குடிநீர் வழங்குதல், நாட்டு மருந்து கசாயம், முகக் கவசம் வழங்குதல்,   உணவின்றி தவிக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்குதல் மற்றும் கணவனை இழந்த ஏழைப் பெண்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி தொண்டு செய்து வருகிறது. 

மேலும், ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் முடங்கியிருக்கும் இச்சூழலில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்ள இணையவழி போட்டிகளை நடத்தியும் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தும் வருகிறது.   கிராமப்புற மாலை நேரக் கல்வியையும், மண்ணின் கலைகளையும் இலவசமாகப் பயிற்றுவித்து வரும் இவர்களின் சேவையைப் பாராட்டி பலரும் தங்களால் இயன்ற சிறு நிதி உதவிகளைச் செய்தும் பாராட்டி வருகின்றனர். 

நாட்டுப்புறவியல் பண்பாட்டு ஆய்வுகள் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் சே. செந்திலிங்கம் அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து இளைஞர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார்.  வழி தவறிச் செல்லும் எத்தனையோ இளைஞர்களுக்கு மத்தியில்  சிறுதொண்டாற்றி பலருக்கு வழிகாட்டியாய் திகழும் சாக்யா அறக்கட்டளைக்கும், தன்னார்வ இளைஞர் பட்டாளத்திற்கும் வாழ்த்துகளைப் பரிமாறுவோம். வளரட்டும் இளைய தலைமுறை.