இயக்குநராக அவதாரம் எடுக்கும் ராம் பொதினேனி!

தென்னிந்தியத் திரையுலகில் ‘எனர்ஜிடிக் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் ராம் பொதினேனி, தனது 23-வது திரைப்படமான ‘#RAPO23’ மூலம் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ் (Sam CS) இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராம் பொதினேனி இயக்குநராகக் களம் இறங்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இப்படம் ஒரு விறுவிறுப்பான சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கதையின் பரபரப்பான மனநிலையையும், தீவிரத்தையும் இசையின் மூலம் கடத்த சாம் சி எஸ் சரியான தேர்வாகப் பார்க்கப்படுகிறார். த்ரில்லர், ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் என எந்த ஜானராக இருந்தாலும், தனக்கே உரிய சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை (BGM) மூலம் ரசிகர்களைக் கட்டிப்போடும் சாம் சி எஸ், இப்படத்திற்கும் ஒரு புதிய இசை அனுபவத்தைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் இவரது திறமை, பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான “இம்மார்டல்” திரைப்படத்தின் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல், இவரது மெலடி திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒருபுறம் காதல் பாடல்களில் மனதை வருடும் மெலடியையும், மறுபுறம் த்ரில்லர் படங்களில் பரபரப்பைக் கூட்டும் பின்னணி இசையையும் சமமாகக் கையாளும் இசையமைப்பாளராக சாம் சி எஸ் தொடர்ந்து தனது முத்திரையைப் பதித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ் கைவசம் பல முக்கிய திரைப்படங்கள் உள்ளன.

தமிழில் “கராத்தே பாபு” மற்றும் கார்த்தியின் “சர்தார் 2” .இயக்குநர்கள் புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம் .ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படம். ஹாரர் த்ரில்லரான “டிமான்டி காலனி 3” .

இந்த மாபெரும் வரிசையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது திரையுலகின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.இயக்குநராகப் புதிய பயணத்தைத் தொடங்கும் ராம் பொதினேனி மற்றும் இசையின் மூலம் கதைக்கு உயிர் கொடுக்கும் சாம் சி எஸ் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, #RAPO23 திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதைக்கு இணையாக இசையும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி, தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பேசப்படும் முக்கியமான காம்பினேஷனாக மாறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.