பலம் இல்லாத திரைக்கதை, (விமர்சனம்!) ‘சண்டக்காரி’. 

Vimal's Routine Acting and Poor VFX Make this Romantic Drama a Disappointing Watch!

ஸ்ரேயா, பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாக வாழும் ஒரு நவீனப் பெண், லண்டன் மாநகரிலுள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். அதே நிறுவனத்தில் அதைவிட ஒரு உயரியப் பதவியை அடைவதற்காக போராடி வரும் அவர், அலுவலகப் பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.

இந்நிலையில், செல்வாக்கும், பணபலமும் கொண்ட ஒரு பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த விமல், ஸ்ரேயாவின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியில் சேருகிறார். இவருக்கு பெரிய குடும்பப் பின்னணி இருந்தாலும், சொந்தமாக ஒரு புதிய செயலியை உருவாக்கித் தன் சொந்தக் காலில் நிற்க விரும்புகிறார். விமலுக்கும், ஸ்ரேயாவிற்கும் இடையே அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் மோதல்களும் ஈகோ சண்டைகளும் வெடிக்கின்றன.

ஸ்ரேயா ஆசைப்பட்ட அந்த உயரிய கார்ப்பரேட் பதவி அவரைத் தேடி வரும் தருணத்தில், அவரது லண்டன் விசா காலம் முடிவடைவது, அவருக்குப் பேரிடியாக வந்து விழுகிறது. தற்காலிகமாகத் தனது லண்டன் விசா காலாவதியானதால், அந்தப் பெரிய பதவியை இழக்க விரும்பாத ஸ்ரேயா, அங்கு நிரந்தர குடியுரிமை விசா வைத்திருக்கும் விமலின் மூலம் அதனைச் சாதிக்கத் திட்டமிடுகிறார். விமலுடன் ஒரு போலித் திருமண ஒப்பந்தத்தைப் போட்டு அதன் மூலம் நிரந்தர விசா பெற்றுவிடலாம் என நினைக்கும் ஸ்ரேயாவின் திடீர் திருமண ஏற்பாடுகளைப் பார்த்து லண்டன் விசா அதிகாரிக்குக் கடுமையான சந்தேகம் எழுகிறது. விசா அதிகாரியின் அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துத் தங்களின் திட்டத்தை அரங்கேற்றுவதற்காக, இருவரும் இந்தியாவிலுள்ள விமலின் பூர்வீகக் கிராமத்து வீட்டிற்கு ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அரசாங்கத்தின் சட்ட விதிகளையும், விசா அதிகாரியின் கண்கானிப்பையும் மீறி ஸ்ரேயா நினைத்த அந்த உயரிய பதவியை அடைந்தாரா, விமலின் கனவு என்ன ஆனது? என்பதை விவரிக்கிறது ‘சண்டக்காரி’ திரைப்படம்.

இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விமல், தனது வழக்கமான முந்தைய பாணிகளிலேயே அடம் முழுவதும் வலம் வருவதால், திரைக்கதையில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் அவரது நடிப்பு ஏற்படுத்தவில்லை. கார்ப்பரேட் திமிரும், பிடிவாத குணமும் கொண்ட பெண் கதாபாத்திரத்திற்கு ஸ்ரேயா சரண் கச்சிதமாகப் பொருந்துவதுடன், காட்சிகளில் அவ்வப்போது தனது கவர்ச்சியையும் தாராளமாகக் காட்டியுள்ளார்.

இவர்களுடன் விமலின் தந்தையாக வரும் பிரபு, தாயாக வரும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக நடித்துள்ள புன்னகை பூ கீதா மற்றும் சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் போன்றோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமரா காட்சிகளில் நாம் பார்ப்பது நிஜ லண்டன் தானா, என்ற சந்தேகம் எழுகிறது. பல முக்கியக் காட்சிகளில் பின்புலத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் (Green Mat) காட்சிகள் அப்பட்டமாகத் தெரிவது படத்தின் தரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
அம்ரிஷின் இசையமைப்பில் வந்துள்ள பாடல்களும், பின்னணி இசையும் கதையின் ஓட்டத்திற்குப் பெரிய அளவில் உதவாமல் ஒரு சராசரி ரகத்திலேயே கடந்து போகின்றன.

பெற்றோரின் பாசமும் அரவணைப்பும் கிடைக்காமல், எப்பொழுதும் கோபத்தின் உச்சியில் இருக்கும் ஒரு பெண்ணின் மனதிற்குள் மெல்ல அரும்பும் காதலையும், எதார்த்தமான அன்பையும் ஒரு அழகான கவிதையாகத் திரையில் கொண்டுவரப் பெரிதும் முயற்சித்திருக்கிறார், கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.மாதேஷ். ஆனால், அது திரைக்கதையில் சரியாக அமையவில்லை என்பதுதான் படத்தின் மிகப்பெரிய சோகம்.

ஒரு தரமான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாகத் தியேட்டர்களில் இருந்திருக்க வேண்டிய இந்த ‘சண்டக்காரி’, பலவீனமான திரைக்கதை மற்றும் செயற்கையான காட்சிகளால் ரசிகர்களின் மத்தியில் எந்தவிதத்திலும் எடுபடவில்லை!