‘கோல்ட் கால்’ – விமர்சனம்!

Cold Call Movie Review: A Low-Budget Corporate Comedy Drama with a Weak Mystery Element!

முன்பின் அறியாத புதிய நபர்களிடமோ நிறுவன தலைமையிடமோ தங்களது பேச்சுத் திறமையால் சாதுரியமாகப் பேசி, நிறுவனத்திற்கான ஆர்டர்களை பெறுவதைக் குறிக்கும் மார்க்கெட்டிங் துறை சார்ந்த முக்கியச் சொல்லான ‘கோல்ட் கால்’ என்ற பெயரில் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது இத்திரைப்படம்.

பெங்களூரு நகரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு இளைஞர்கள் மார்க்கெட்டிங் பிரதிநிதிகளாகப் பணியில் இணைகிறார்கள். வெவ்வேறு பின்னணியைக் கொண்டிருந்தாலும், நாளடைவில் இவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பிரிக்க முடியாத நெருங்கிய நண்பர்களாக மாறுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட  டார்கெட்டினை அடையமுடியாமல் தவிக்கும் இந்த இளைஞர்களுக்கு, தங்களது வேலை எந்த நேரத்திலும் பறிபோகலாம் என்ற  இக்கட்டான சூழல் உருவாகிறது.

இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க, நிறுவனத்தின் விதிகளை மீறி, ஒரே குறிப்பிட்ட பகுதியில் இவர்கள் நான்கு பேரும் கைகோர்த்து இணைந்து கூட்டு முயற்சியில் இறங்குகிறார்கள். இப்படி அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் மகனான சிறுவன் கடத்தப்படுகிறான். இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இந்த நான்கு மார்க்கெட்டிங் இளைஞர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் காவல் துறை அறிவிப்பதுடன், அவர்களைக் குற்றவாளிகளாகத் தேடவும் தொடங்குகிறது. இவர்களது நிறுவன மேலாளரும் இந்த வழக்கில்  கைது செய்யப்படுகிறார்.  அந்தச் சிறுவன் ஏன் கடத்தப்பட்டான், எதற்காக இந்தக் கடத்தல்? போன்ற  கேள்விகளுக்கான விடைகளை, கலகலப்பான நகைச்சுவைப் பாணியில் விவரிக்கிறது இத்திரைப்படம்.

வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பெங்களூரு வந்த மார்க்கெட்டிங் இளைஞர்களாக நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ் மற்றும் கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு கதாநாயகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைகளை உணர்ந்து கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு இணையாக அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி மற்றும் கீர்த்தனா புல்கி ஆகிய நால்வரும் தங்களது பங்களிப்பை எந்தவிதக் குறையுமின்றி செய்துள்ளனர்.

சரவணனின் ஒளிப்பதிவும், பிரணவ் கிரிதரனின் பாடல்களும் பின்னணி இசையும் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மிகவும் சுமாரான ஒரு ரகத்திலேயே அமைந்துள்ளன.

இப்படத்தைக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தம்பிதுரை, கார்ப்பரேட் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளின் அன்றாடப் பணிச் சவால்களுக்கு நடுவே, கிளாமரையும் எதார்த்தமான நகைச்சுவையையும் கலந்து ஒரு சுவாரசியமான கமர்ஷியல் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது  ரசிகர்களைக் கவரும் வகையில் அவருக்குக் கைகூடவில்லை. திரைக்கதையின் பலவீனமான ஓட்டத்தால் இது  ஒரு சுமாரான திரைப்படமாகவே இருக்கிறது.