செம்பி – விமர்சனம்!

மலைவாழ் பழங்குடியின த்தை சேர்ந்த வயது முதிர்ந்த பெண், வீரத்தாய் (கோவை சரளா). பெற்றோர்களை இழந்த தனது பேத்தி, செம்பியை (நிலா) அரவணைத்து வருகிறார். இருவரும் காடுகளின் நடுவே இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வருகின்றனர். காடுகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஜீவனம் நடத்தி வருகின்றனர்.

கள்ளம் கபடமில்லாத காடுகளை சுற்றிவரும் சிறுமி செம்பியை மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். சாவின் விளிம்பினை எட்டிப்பார்த்துவிட்டு உயிர் பிழைக்கிறாள் செம்பி. சட்டத்தின் உதவியை நாடுகிறார் வீரத்தாய். அதிகார மைய்யம் அவர்களை கொலை செய்ய முயற்சிக்கிறது.

செம்பிக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பது தான்,  செம்பி படத்தின் கதை..

வீரத்தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளா, மலைவாழ் பெண்ணை கண்முன்னே நிறுத்துகிறார். சற்றே கூன் விழுந்தபடி நடக்கும் அவரது தோற்றமும், நடிப்பும் சபாஷ் போடவைக்கும். சிறப்பாக நடித்திருக்கிறார்.

செம்பி கதாபாத்திரத்தில்  சிறப்பாக நடித்திருக்கும் சிறுமி நிலாவின் நடிப்பு, தேர்ந்த நடிப்பு!

பேருந்து பயணியாக வரும் அஷ்வின் குமாரின், கதாபாத்திர வடிமைப்பு சிறப்பு. போக்சோ சட்டத்தை பற்றிய விளக்கம், வழக்கை எப்படி கையாள வேண்டிய விதம் குறித்தும் விளக்குவதும் பலரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

பேருந்து  நடத்துநராக நடித்திருக்கும் தம்பி ராமையா,  தனது விரலால் விசிலடிக்கும் ஸ்டைல் சூப்பர். வழக்கமான  நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

அரசியல்வாதிகளாக  நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா இருவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதே போல் நீதிபதியாக  நடித்திருக்கும்  கு.ஞானசம்பந்தம் மனம் கவர்கிறார்.

காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன். இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின். பின்னணி இசை பரவாயில்லை.

பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆஸ்பத்திரி உள்ளிட்ட காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். வேண்டுமென்றே பரிதாபத்தை ஏற்படுத்துவதற்காக அந்தக் காட்சிகளின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு காட்சிகளும் வலிய திணிக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. க்ளைமாக்ஸில் அஸ்வினை கடவுளாக சித்தரித்துள்ளது, கேள்விக்குரியதாகிறது.

செம்பி, முழுமையற்ற படம்!