‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனம் பெற்றவர் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். இவரது இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘மஹாராஜா’. விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ் நடிக்க, இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மற்றும் நாயகி மம்தா மோகன்தாஸ் ஆகிய இருவரும் படம் குறித்து கூறியதாவது…
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் கூறுகையில்,
“நீங்கள் இப்போது டிரைலரில் பார்த்தது வெறும் 20 சதவீதம் தான், மீதி 80 சதவீதம் படத்தில் இருக்கிறது. இந்த படத்தை நான் இயக்கும் போது விஜய் சேதுபதி அண்ணாவின் 50 வது படம் என்று தெரியாது, அவரிடம் கதை சொன்ன போது கூட தெரியாது, படப்பிடிப்பு தொடங்கிய போது தான் தெரியும். அனைத்து படத்தையும் கவனமாக தான் செய்வேன், சேது அண்ணாவின் 50 வது படம் என்பதால் கொஞ்சம் பொறுப்பு கூடியிருக்கிறது. ஒரு சாதாரண மனிதன், பெரிய படிப்பு அறிவு இல்லாதவர், அவர் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தால் அதை அவர் எப்படி எதிர்கொள்வார், அதன் மூலம் தான் யார்? என்பதை அவர் அறிந்துக்கொள்கிறார், என்பதை சஸ்பென்ஸாக சொல்லியிருக்கிறேன்.
லட்சுமி யார்? என்ற சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பயணிக்கும். ஆனால், படத்தின் மிகப்பெரிய பலமே அந்த ஒரு கேள்வி மட்டும் அல்ல, அதை சுற்றி மேலும் பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கின்றன. அவை அனைத்தும் முழு படத்தையும் சஸ்பென்ஸாக நகர்த்தி செல்லும். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை முழுமையான திருப்திப்படுத்தும். அதனால் தான் டிரைலர் 20 சதவீதம் என்று சொன்னேன், 80 சதவீதம் படத்தில் இருக்கிறது. படம் பார்த்தவர்கள் அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சேது அண்ணாவும் குடும்பத்துடன் படத்தை பார்த்தார், அவருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னதுடன், படத்தில் அவரையும் பிடித்திருப்பதாக சொன்னார்.
படத்தில் சேது அண்ணாவின் பெயர் மஹாராஜா, அவர் வாழ்க்கையும் அதுபோல் தான் இருக்கும். அவரை சிகை அலங்கார கலைஞராக நடிக்க வைத்ததற்கு காரணம், வாழ்க்கையில் நிறைய பேரை சந்திப்போம், அதில் சிலர் நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அப்படி நான் பார்த்த மனிதர்களை கொண்டு தான் அப்படி ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தேன், மற்றபடி சிலை அலங்கார தொழில் மற்றும் சாதி பற்றி படத்தில் எதுவும் பேசவில்லை.” என்றார்.
நடிகை மம்தா மோகன் தாஸ் கூறுகையில்,
“தமிழ் சினிமாவில் அதிக இடைவெளி விழுந்துவிட்டது. காரணம், நான் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறேன். மஹாராஜா படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது அதனால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். ஆஷிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போதைக்கு என் கதாபாத்திரம் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும். ஏனென்றால் என் கதாபாத்திரத்தை சுற்றி நிறைய சஸ்பென்ஸ் இருக்கிறது, அதனால் விரிவாக சொல்ல முடியாது.” என்றார்.
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யம் நடித்தது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த இயக்குநர் நித்திலன், “எனக்கு பிடித்தவர்களில் அனுராக் காஷ்யப் சாரும் ஒருவர். எனக்கு பிடித்தவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதேபோல் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததாலும் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். முதலில் அவரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டேன். பிறகு அவரது தேதியில் மாற்றம் ஏற்பட்டதால் அவர் நடிக்க முடியாத சூழல் உருவானது. இதனால், வேறு சில நடிகர்களை பார்த்தோம், ஆனால் யாரும் செட்டாகவில்லை. இறுதியில் அனுராக் சாரே அந்த வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி. பாராதிராஜா சாரும் எனக்கு பிடித்தவர், அவரையும் நடிக்க வைத்திருக்கிறேன். குரங்கு பொம்மை படம் போல் அவரது வேடம் இல்லை என்றாலும், ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.” என்றார்.
‘மஹாராஜா’ திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.