வெப்பன் திரைப்படத்தினை, மில்லியன் ஸ்டுடியோ தயாரிப்பில், எழுதி இயக்கியிருக்கிறார் குகன் சென்னியப்பன். இதில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன் ,வேலுபிரபாகரன், வினோதினி வைத்தியநாதன், பெனிடோ பிராங்க்ளின், மாயா கிருஷ்ணன், ரகு இசக்கி, ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ மேக்னா சுமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பிரபு ராகவ்,இசை ஜிப்ரான்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும், யுடியூபருமான வசந்த் ரவி, மனித சக்தியை மீறிய ஒரு அதீத சக்தி பெற்றவர்கள் பூமியில் இருப்பதாகவும் நம்புகிறார். இந்த சக்தி படைத்த மனிதனைத் தேடி, தேனியில் உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தின் அருகில் வீடியோ பதிவு செய்ய செல்கிறார்.
ராஜீவ் மேனன் ‘பிளாக் சொசைட்டி’ என்ற பெயரில், உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் அபாயகரமான ஆய்வினைச் செய்து வருகிறார். இதற்காக மனிதர்கள் பலியாக்கப்படுகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் போது தேனியில் ஒரு அதீத சக்தி கொண்ட மனிதன் இருப்பதை இவரும் அறிந்து கொள்கிறார்.
இயற்கையின் மீது நேசம் கொண்ட சத்யராஜ், அதே காட்டுப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவரும், ஒரு கட்டத்தின் இணைகிறார்கள் அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், வெப்பன் படத்தின் கதை.
தெளிவான திரைக்கதையில் சொல்லப்படவேண்டிய படம். ஆனால் குழப்பமான திரைக்கதையினால், ரசிகர்கள் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. ஹிட்லர் காலத்தில் சிப்பாய்களுக்கு கொடுக்கப்பதற்காக தயாரிக்கப்பட்ட அதி தீவிர உயிரி மருந்து. அதை இந்தியாவிற்கு திருடி வந்து தன்மகனுக்கு செலுத்திய சத்யராஜ். ஆரா, குண்டலினி இப்படி எல்லாவற்றையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார், இயக்குநர் குகன் சென்னியப்பன். எதுவும் தெளிவாக சொல்லப்படவில்லை.
யுடியூப் இளைஞராக வசந்த் ரவி. அவருடைய உடல்வாகுக்கு ஏற்ற கதாபாத்திரம். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக பாய்கிறார். சத்யராஜ் கதாபாத்திரம் மீது முதலில் ஆர்வம் ஏற்படுகிறது. அதன் பிறகு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தான்யா ஹோப் வந்து போகிறார்.
பிளாக் சொஷைட்டியின் தலைவராக ராஜீவ் மேனன். யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன் ,வேலுபிரபாகரன், வினோதினி வைத்தியநாதன், பெனிடோ பிராங்க்ளின், மாயா கிருஷ்ணன் என பலர் நடித்திருந்தாலும் யாரும் ஈர்க்கவில்லை!
பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் ஓகே!
வெப்பன் – குண்டு இல்லாத துப்பாக்கி!