விஸ்வாமித்ரரின் கடுந்தவத்தை கண்டு அஞ்சினான் இந்திரன். இதனால் அந்த தவத்தை கலைக்க, அரம்பையர்களில் ஒருத்தியான மேனகையை அனுப்பினான். மேனகையின் அழகில் மயங்கிய விஸ்வாமித்திரர் அவளை மனைவியாக்கி வாழ ஆரம்பித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்திரனின் சூழ்ச்சியால் தான் இது நடந்தது. என்பதை புரிந்து கொண்டார் விஸ்வாமித்திரர். அதனால் அவர் மேனகையை விட்டு விலகினார். இந்திரன் மேனகையை திரும்பவும் இந்திரலோகத்திற்கு அழைத்து கொண்டார். மேனகை இந்திரலோகத்திற்கு செல்வதற்கு முன்னர் அந்த குழந்தையை கன்வ முனிவர் ஆஷ்ரமத்தில் விட்டுச்சென்றாள்.
கன்வ முனிவர், தனது ஆஷ்ரமத்தில் சாகுந்தல பறவைகளால் சூழப்பட்ட மேனகையின் குழந்தையை எடுத்து சாகுந்தலம் எனப்பெயரிட்டு, வளர்த்து வருகிறார். அதன் பின்னர்
பருவமடைந்த சகுந்தலாவை, காட்டுக்குள் வேட்டைக்கு செல்லும் அரசன் துஷ்யந்தன், கண்டவுடன் காதல் கொள்கிறான். இருவருமே நெருக்கமாக பழகி வருகின்றனர்.
மக்களை துன்புறுத்தும் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற போருக்குச் செல்ல முடிவெடுக்கும் துஷ்யந்தன், அதற்கு முன்னர் சகுந்தலாவை காந்தர்வ மணம் செய்து கொள்கிறான். கற்பமடைந்த சகுந்தலா நீண்ட நாட்கள் சென்றும் வராத துஷ்யந்தனை எதிர் நோக்கி வருகிறாள்.
இதனிடையே கன்வ முனிவரின் ஆஷ்ரமத்திற்கு வருகிறார், துர்வாசர் மாமுனிவர். அவர் கூப்பிட்டும் கவனிக்காமல் இருந்த சகுந்தலாவிற்கு சாபம் கொடுக்கிறார். அந்த சாபம் என்ன? துஷ்யந்தனும் சகுந்தலாவும் சேர்ந்தனரா, இல்லையா? என்பது தான் சாகுந்தலம் படத்தின் கதை. பலருக்கும் தெரிந்த, கேள்விபட்ட கதை தான் என்றாலும், தெரியாதவர்களுக்காக ஒரு சஸ்பென்ஸ்!
சகுந்தலாவாக நடித்திருக்கும் சமந்தா, கதாபாத்திரத்திற்கான சரியான தேர்வு. துஷ்யந்தனை காதலிக்கும் காட்சிகளிலும், அரச சபையில் அனைவரது முன்னிலையில் அவமானப்படும் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
துஷ்யந்தனாக நடித்திருக்கும் தேவ் மோகன் பொருத்தமான தேர்வு. அரசனுக்கு ஏற்ற அழகும், கம்பீரமும் கதாபாத்திரத்தை மேம்படுத்துகிறது. சில சாயல்களில் நடிகர் பிரசன்னாவை நினைவு படுத்துகிறார்.
மோகன் பாபு, சச்சின் கெடேகர், அதிதி பாலன், அனன்யா நாகல்லா, பிரகாஷ் ராஜ், கெளதமி, மது, கபீர் பேடி உள்ளிட்டவர்களும் தத்தமது கதாபாத்திரங்களில் நன்றாகவே நடித்துள்ளனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ், என்ற உணர்வவை ஏற்படுத்தினாலும், ஒரு பரவசம் இருக்கத்தான் செய்கிறது.
சேகர் ஜோசப்பின் ஒளிப்பதிவும், மணிசர்மாவின் இசையும் நன்றாகவே இருக்கிறது. பாடல்கள் பெரிதாக கவரவில்லை!
இயக்குநர் குணசேகர், நல்ல காதல் கதை, பிரமாண்டதொழில்நுட்ப வசதி கிடைத்தும், காட்சியமைப்பதிலும் திரைக்கதை எழுதுவதிலும் தவறியிருக்கிறார்.