சில நொடிகளில் – விமர்சனம்!

ரிச்சர்ட் ரிஷி, ‘புன்னகை பூ’ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், சில நொடிகளில். இப்படத்தினை, வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார். அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கான பின்னணி இசையை, பாலிவுட் இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி அமைத்துள்ளார்.

ரிச்சர்ட் ரிஷி, ‘புன்னகை பூ’ கீதா இருவரும் இங்கிலாந்தில் உள்ள செம்ஸ்ஃபோர்டு நகரத்தில் வசிக்கும் தம்பதியினர். ரிச்சர்ட் ரிஷி, புகழ் பெற்ற பிளாஸ்டிக் & காஸ்மெடிக் சர்ஜன். இவரிடம் சிகிச்சை பெற வருகிறார், ‘மாடல்’ யாஷிகா ஆனந்த்.  நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. ரிச்சர்ட் ரிஷி, ‘புன்னகை பூ’ கீதாவை டைவர்ஸ் செய்து விட்டு யாஷிகா ஆனந்தை கல்யாணம் செய்யும் முடிவில் இருக்கிறார்.

ஒரு நாள், ‘புன்னகை பூ’ கீதா வீட்டில் இல்லாத போது, ரிச்சர்ட் ரிஷியும் – யாஷிகா ஆனந்தும் ஒயின் போதையிலும், மாத்திரையின் வீரியத்துடனும் சல்லாபத்தில் மிதக்கின்றனர். அந்த நேரத்தில், ‘புன்னைகை பூ கீதா’ வீட்டிற்கு வருவதாக போன் செய்கிறார். யாஷிகா ஆனந்த் வீட்டை விட்டு வெளியேறும் தருவாயில், உயிரை விடுகிறார். செய்வதறியாது திகைக்கும் ரிச்சர்ட் ரிஷி, பிறகு யாஷிகா ஆனந்த்தின் பிணத்தினை, வீட்டிலிருக்கும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டுகிறார். இதற்குள் வீட்டினை அடைகிறார், அவரது மனைவி புன்னகை பூ கீதா. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், சில நொடிகளில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் யூகிக்க முடியாத, க்ளைமாக்ஸ்!

சில நொடிகளில் படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் இயக்குனர் விஜய் பரத்ராஜின் கதைக்களத்திற்கேற்ற திரைக்கதையும், காட்சியமைப்பும் படத்தின் பலமாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த், ரிச்சர்ட் ரிஷியுடனான நெருக்கமான காட்சிகளில், தனது வனப்பில்லா வாலிபத்தால் ரசிகர்களை வசீகரிக்க முயற்சித்திருக்கிறார். அது சில காட்சிகளில் ஒர்க் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ரிச்சர்ட்டின் மனைவியாக ‘புன்னகைப் பூ’  கீதா, தனது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ரிச்சர்ட் ரிஷிக்கு, நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம். ஆனால், அதை அவரால் சரியாக கையாள முடியாமல் போகிறது. பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை என அனைத்திற்கும் ஒரே மாதிரியான அவரது முகபாவம், கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கவில்லை!

அபிமன்யு சதானந்தனின் ஒளிப்பதிவு கோணங்கள் சிறப்பாக இருக்கிறது. ஆனால் காட்சிகள் தெளிவற்று இருக்கிறது.

இயக்குனர் விஜய் பரத்ராஜ், திரைக்கதையில் விறுவிறுப்பினை கூட்டியிருந்தால், க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டிற்கு, இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை!