‘நாராயணன் செல்வம்’ புரொடக்சன்ஸ் தயாரித்து, ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து இயக்கியிருக்கும் படம், லாக்கர். இதில், விக்னேஷ் சண்முகம்,நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன் , சுப்பிரமணியன் மாதவன், தாஜ்பாபு, பெனட், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தணிகை தாசன் ஒளிப்பதிவு செய்திருக்க, வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார்.
கதாநாயகன் விக்னேஷ் சண்முகமும் அவரது நண்பர்களும் கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள். சாதரண மனிதர்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளிடமே ஆட்டையை போடுவதில் பலே கில்லாடிகள். ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களை, கதாநாயகி நிரஞ்சனி அசோகன் ஏமாற்றுகிறார். அதிலிருந்து நாயகன் விக்னேஷ் சண்முகமும், நாயகி நிரஞ்சனி அசோகனும் காதல் கொள்கின்றனர். இருவரும் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அப்போது நிரஞ்சனி அசோகன், தனது கடந்த கால வாழ்க்கையில், வில்லன் நிவாஸ் ஆதித்தனால் ஏமாற்றப்பட்டு, சொத்துக்களை இழந்த விவரத்தை கூறுகிறார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து, நிவாஸ் ஆதித்தன் லாக்கரில் இருக்கும் 6 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி கொள்ளையடித்தனரா, இல்லையா? என்பது தான், லாக்கர் படத்தின் கதை, திரைக்கதை.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய பணத்தினை, அரசியல்வாதியிடம் கொள்ளையடிக்கின்றனர். அந்த பணத்தினை அரசியல்வாதியும் கண்டு கொள்ளவில்லை! லாக்கர் படத்தினை இயக்கிய, இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் ஆகியோரும் கண்டு கொள்ளவில்லை. திரைக்கதை பணம் கொள்ளை சம்பவத்திலிருந்து தங்கக் கடத்தலை நோக்கி திசை திரும்புகிறது. இப்படி முதல் பாதி சற்று அப்படி இப்படி சென்றாலும், இரண்டாம் பாதி பரவாயில்லை. திரைக்கதையாக்கத்தில் இயக்குனர்களுக்கு போதிய புரிதல் இல்லாதது காட்சிகளில் தெரிகிறது. குறிப்பாக ஷேர்ஸ் மோசடி குறித்த காட்சிகள். அதாவது 2 கோடி பெறுமானம் உள்ள ஷேர்ஸ்களை 1 கோடிக்கு விற்க முயல்வது. அதுவும் ஒரு ஆடிட்டரிடமே!?
கதாநாயகன் விக்னேஷ் சண்முகம் , ஜனா கதாத்திரத்திற்கு ஏற்றபடி நடிக்க முயற்சித்திருக்கிறார். கதாநாயகி நிரஞ்சனி அசோகன், பூஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பெரிதாக அவரது பங்கு இல்லை. வில்லனாக நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்தன், கவனம் பெறுகிறார்.
படத்தின் பலமாக இருக்கிறது, தணிகை தாசனின் ஒளிப்பதிவு. இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீனிவாசனின் இசை ஓகே.
பளிச்செனத்தெரியும் லாஜிக் ஓட்டைகளையும், சிறுபிள்ளைத்தனமான காட்சியமைப்பினையும் தவிர்த்திருந்தால் லாக்கர் ஒரு நல்ல படமாக அமைந்திருக்கும்.