சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்!

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என்.  எழுதி இயக்கியிருக்கிறார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இன்று வெளியாகியிருக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’படத்தினை 11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் பிரபு திலக் வெளியிட்டிருக்கிறார்.

லாஜிக்கை புறந்தள்ளிவிட்டு, ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார், இயக்குனர் விக்னேஷ் ஷா பி. என்.  எப்படி இருக்கிறது?

சயின்டிஸ்ட் ஷாரா, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ( செயற்கை அறிவுத்திறன் ) ஸ்மார்ட் ஃபோன் ஒன்றினை கண்டுபிடிக்கிறார்.  அந்த ஸ்மார்ட் ஃபோன், ஃபுட் டெலிவரி வேலை செய்யும் மிர்ச்சி சிவாவின் கைகளில் கிடைக்கிறது. சிம்ரன் என பெயரிடப்பட்ட அந்த ஸ்மார்ட் ஃபோனுடன் மிர்ச்சி சிவா நெருக்கமாகிறார். இந்நிலையில் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரன், மிர்ச்சி சிவாவை தான் காதலிப்பதாகவும், தனது காதலை ஏற்று கொள்ளும்படியும், பல பொருட்களை பரிசளித்து, சிவாவின் காதலுக்காக ஏங்குகிறது. சிவாவோ அந்தக் காதலை மறுப்பதுடன், உதாசினப்படுத்துகிறார். இதனால் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரன், சிவாவை பழி வாங்க முடிவு செய்கிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்  படத்தின் கதை.

படம் ஆரம்பித்த உடனேயே மெதுவாக சென்றபோதும், அதன் பின்னர் வேகமெடுக்கிறது. ஸ்மார்ட்போன் சிம்ரன், பழிவாங்கும் காட்சிகள் தொடங்கிய உடனேயே எந்திரன் படத்தினையும் நினைவு படுத்துகிறது.

கதாபாத்திரங்களை வடிவமைத்த இயக்குனர் விக்னேஷ் ஷா, அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுப்பதில் சற்றே தடுமாறியிருக்கிறார். குறிப்பாக, சயின்டிஸ்ட்டாக நடித்திருக்கும் ஷாரா, அதற்கு பொருந்தவில்லை!

வழக்கமான தனது பஞ்ச் டயலாக்குகளை வைத்துக்கொண்டு சிரிக்க வைக்கிறார், மிர்ச்சி சிவா. படத்தின் மொத்த பலமும் இவர் தான். இன்னும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கலாம்!

மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோவும் சேர்ந்து கொண்டு சிரிக்க வைக்கிறார்கள்.

மிர்ச்சி சிவா, மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ்  ஆகியோர் சம்பந்தப்பட்ட  காதல் காட்சிகள் சிலருக்கு அதிருப்தியை தரும்.

ஸ்மார்ட் போனும், கையுமாக சுற்றிவரும் இளைஞர்கள் சிலருக்கு ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பிடிக்கும்!