‘சீதா ராமம்’ – விமர்சனம்!

லண்டனில் படித்துவரும் ராஷ்மிகா மந்தனா, பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டவர். பாகிஸ்தானை வெறித்தனமாக நேசிப்பவர். இந்தியக்கொடியை கண்ட மாத்திரத்தில் அதை எரிக்கும் அளவிற்கு அவர், இந்தியாவின் மேல் அதீத காழ்ப்புணர்ச்சி கொண்டவர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் உயரதிகாரியான ராஷ்மிகாவின் தாத்தா சச்சின் கடேகர், இந்திய ராணுவ உடையில் அணியும் நட்சத்திரப் பதக்கத்தையும், ஒரு கடிதத்தையும் இந்தியாவில் இருக்கும் ஒருவரிடம் சேர்த்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்து போகிறார்.

ராஷ்மிகா மந்தனா அந்தக்கடிதத்தை உரியவரிடம் கொடுத்தாரா? அந்தக்கடிதம் யாருக்கு யாரால் எழுதப்பட்டது. என்பது தான் ‘சீதா ராமம்’ படத்தின்  சுவாரஷ்யமான கதை, உயிரோட்டமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

இன்றைய பெண்களின் மனம் கவர் கதாநாயகனாக வலம் வரும் துல்ஹர் சல்மானுக்கு அடிதடி காட்சிகளை விட காதல் காட்சிகள் கைகொடுக்கிறது. மிருணாள் தாகூரை துரத்தி துரத்தி காதல் செய்யும் காட்சிகளில் இளமை ததும்புகிறது. நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

மிருணாள் தாகூர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இளவரசியாக மிடுக்குடனும், சாதரணப் பெண்ணாகவும் மாறுபட்ட நடிப்பின் மூலம் மனம் கவருகிறார்.

இவர்களுடன் ராஷ்மிகாவும், போட்டிப்போட்டு நடித்திருக்கிறார். முதலில் இந்தியா மீது வெறுப்பைக் காட்டும் காட்சியிலும், க்ளைமாக்ஸில் தான் யார் என்பதை உணரும் தருணத்திலும், பாவனைகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், சுமந்த் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளார்கள். இவர்கள் மூலம் இந்திய ராணுவத்தில் எண்ணற்ற பேரின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இயக்குனரை பாராட்ட வேண்டும்.

பி.எஸ்.வினோத், ஷ்ரேயாஸ் கிருஷ்ணன் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள், காதலர்களுக்கான ஸ்பெஷல்! ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வலிமையான வசனங்களை எழுதியிருக்கிறார், மதன் கார்க்கி. அதே சமயம் காதல் காட்சிகளில் அவரது வசனங்கள் உருக வைக்கிறது.

சீரான வேகத்தின் செல்லும் திரைக்கதையின் நடுவே சில டிவிஸ்டுகள் க்ளைமாக்ஸ் வரை செல்கிறது.

மத நம்பிக்கைகளை தூண்டும் சில காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் ‘சீதா ராமம்’ அனைவருக்கும் பிடிக்கும்!

‘சீதா ராமம்’ காதலர்களுக்கான ஸ்பெஷல்!