‘விக்டிம்’  –  ( வெப் சீரிஸ் ) ஆந்தாலஜி  விமர்சனம்!

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு டஃப்  கொடுக்கும் விதமாக த்ரில்லிங், விறுவிறுப்பு நிறைந்த ரசிக்கும்படியான வெப் சீரியல்கள்  OTT தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கலையரசன், குரு சோமசுந்தரம் நடித்து பா.ரஞ்சித் இயக்கிய தம்மம். பிரசன்னா, அமலா பால் நடித்து வெங்கெட்பிரபு இயக்கிய கன்ஃபெஷன். பிரியா பவானிசங்கர், நட்டி நடராஜ் நடித்து எம்.ராஜேஷ் இயக்கிய மிராஜ். நாசர், தம்பி ராமைய்யா நடித்து சிம்புதேவன் இயக்கிய கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும். ஆகிய நான்கு எபிசோட்களை உள்ளடக்கிய Victim – Who is Next   என்ற பெயரிடப்பட்ட ஆந்திராலஜி த்ரில்லர் ஆகஸ்ட் 5 ம் தேதி  முதல் SONY Liv OTT   தளத்தில் வெளியாகியிருக்கிறது. எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

‘தம்மம்’

பெரு விவசாயி கலையரசனுக்கும், குறு விவசாயி குரு சோமசுந்தரத்திற்கும் இடையே நடக்கும் ஒரு சிறிய சம்பவம் வெட்டு, குத்து வரை செல்கிறது. அதில் அறம் யாரால் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது, என்பதை அழகாக சொல்லியிருப்பதுடன் தனது நுட்பமான அரசியலையும் இதன் ஊடாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

ஒரே ‘வயல்வெளி’ லொக்கேஷனில் அலுப்பு ஏற்படுத்தாமல் சுவாரஷ்யமாக படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், கலையரசன், முக்கியமாக பேபி தாரணி மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோரது நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.

பேபி தாரணியின் மூலம் இளைய தலைமுறையினருக்கு அறமும், வீரமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நச்சுன்னு சொல்லியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

சண்டைக்காட்சியினை அழகாக படம்பிடித்துள்ளார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். சண்டைகாட்சியை அமைத்த ஸ்டண்ட் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

‘கொட்டைபாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்’

கொரோனா தாண்டவம் ஆடும், ஊரடங்கு காலம். நிருபர் தம்பி ராமய்யா அவரது வேலையை காப்பாற்றிகொள்ள வேண்டுமானால், ஒரு சென்சேஷனல் ஸ்டோரி கொடுத்தாக வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாரும் எளிதில் நெருங்க முடியாத மொட்டை ‘மாடி சித்தரை’ சிறப்பு பேட்டி எடுக்க முடிவு செய்கிறார், தனது உதவியாளர் வீஜே விக்னேஷ் மூலமாக. இதன் பிறகு என்ன நடந்தது என்பதை தனது வழக்கமான ஃபேண்டஸி திரைக்கதை மூலம் சமகால கார்ப்பரேட், அரசியலை நையாண்டி செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.

சித்தராக, சிறப்பாக நடித்திருக்கிறார் நாசர். நிருபராக தம்பி ராமய்யா வழக்கம் போல் முத்திரை பதிக்கிறார். வீஜே. விக்னேஷ் சிரித்து மொக்கை போடாமல் நடித்திருக்கிறார்.

எதிர்பார்க்காத, சூப்பர் க்ளைமாக்ஸ்!

‘மிராஜ்’

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ப்ரியா பவானி ஷங்கர், வேலை நிமித்தம் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார். கெஸ்ட் ஹவுஸின் மேனேஜர் நட்டி..நட்ராஜ், மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் இந்த இருவரைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. ஆனால் வேறு சிலர் இருப்பதை போன்ற உணர்வு ப்ரியா பவானி ஷங்கருக்கு ஏற்படுகிறது. இதன் பின்னர் ஒரு இரவு நேரத்தில் நடக்கும் திக்.. திக்.. அமானுஷ்ய சம்பவங்கள் தான், மிராஜ் எபிசோட்!

இதுவரை சிரிக்க வைத்த இயக்குனர் எம்.ராஜேஷ் மிரள வைத்திருக்கிறார். ப்ரியா பவானி ஷங்கர், நட்டி நட்ராஜ் இருவருமே குறை சொல்லமுடியாத அளவு நடித்திருக்கிறார்கள்.

க்ளைமாக்ஸ் ஏமாற்றம்!

கன்ஃபெஷன்

அல்ட்ரா மாடர்ன் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார், அமலாபால். அவரை, ப்ரொஃபஷனல் கில்லரான பிரசன்னா துப்பாக்கி முனையில் நிறுத்தி அவர் செய்த தவறு ஒன்றிர்க்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதற்கு நிர்பந்திக்கிறார். அவர் அப்படி என்ன தவறு செய்தார். இதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதை த்ரில்லாகவும், கிளு கிளுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கெட் பிரபு.

இளைஞர்களை கிறங்கடிக்கும் அமலாபாலின் நடிப்பு அபாரம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு! க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்! திக்..திக்..

வெவ்வேறு அனுபவம் தரும் இந்த ‘விக்டிம்’  –  ( வெப் சீரிஸ் ) ஆந்தாலஜி  யைப்பார்க்கலாம்.