தமிழ் சினிமாவுக்கு ’அயலான்’ பெஞ்ச் மார்க்காக இருக்கும்! – கோட்டபாடி ஜே. ராஜேஷ்

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான இது வரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

’அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கேஜேஆர், கருணாகரன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் பேசியதாவது,

”தமிழ் சினிமாவிற்கு ’அயலான்’ படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும். தெலுங்கு சினிமாவுக்கு எப்படி ’பாகுபலி’யோ, கன்னட சினிமாவுக்கு எப்படி ஒரு ’கேஜிஎப்’போ அதேபோல் சிஜியில் தமிழ் சினிமாவுக்கு ’அயலான்’ பெஞ்ச் மார்க்காக இருக்கும். இயக்குநர் ரவிக்குமார் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பல கோடிகளை தாண்டி விட்டனர். நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள். நீங்கள் பவுடர், ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி உள்ளீர்கள். இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 5ம் தேதி வெளியாகும். இப்படத்தால் சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் என்கின்றனர். அது எல்லாம் முடிந்துவிட்டது. இது ’அயலான்’ பொங்கல்” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது,

“இந்தப் பயணத்தில் நிறைய நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி. இந்தப் படத்திற்காக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ’அயலான்’ ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்துக்கு நன்றி. இந்த சமயத்தில் என் அம்மாவை மிஸ் செய்கிறேன். அவரது ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு உண்டு. இந்தப் படத்தை ஏன் இத்தனை வருடங்கள் விடாமல் நான் வைத்திருந்தேன் என்றால், என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்த கமிட்மெண்ட்தான் காரணம். படத்தின் கலெக்‌ஷன் மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படத்தை உணர்வுப்பூர்வமாக பார்ப்பவன் நான். இந்தப் படத்தில் வேலை பார்த்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

ரஹ்மான் சார் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். நீரவ் ஷாவின் அனுபவம் பெரியது. அவர் எங்களுக்கு மிகப்பெரிய பலம். இப்படி திறமையான கலைஞர்களை வைத்துக் கொண்டு படம் சரியாக எடுக்கவில்லை என்றால் என்மீதுதான் பிழை. அதனால், எல்லா விஷயங்களுமே சிறப்பாக செய்துள்ளோம். விஎஃப்எக்ஸ் வைத்து படம் நிச்சயம் சிறப்பாக எடுப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. அதை சாத்தியமாக்கிக் கொடுத்த சாந்தோம் எஃபெக்ட்ஸூக்கு நன்றி. உலகத்தரமான எஃபெக்ட்ஸை அவர்கள் செய்து கொடுத்தனர். அந்தக் காட்சிகளை எல்லாம் பாக்கும்போது எனக்கே பெருமையாக இருந்தது. என் உதவியாளர்கள் என்னுடன் ஆறு வருடங்களாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் சப்போர்ட் மிக அதிகமாக இருந்தது. சிவகார்த்திகேயன் என்னை எந்த இடத்திலும் சந்தேகிக்கவில்லை, தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் எப்போதுமே அவருக்கு ஸ்பெஷல். இது எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. படத்தில் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளளார்’ என்றார்.