நடிகர் சூர்யா உயிர் தப்பினார்! போலீஸ் விசாரணை!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனங்கள்  இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப்படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தலைமையில் வழக்கம்போல், சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் ‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சிகள், இன்று படமாக்கப்பட்டு வந்தது.

டாப் ஆங்கிளில் படம்பிடிப்பதற்கு பல கேமிராக்கள் படப்பிடிப்பு தளத்தின் மேல் பகுதியில் ரோப்ப்பில் இணைக்கப்பட்டன. இந்த கேமிராக்கள் சண்டைக்காட்சிகளை படம்பிடித்தன. அப்போது ஒரு கேமிராவின் இணைப்பு வலுவற்ற நிலையில், அதன் பிடியிலிருந்து கீழே நின்று கொண்டிருந்த நடிகர் சூரியாவின் மீது விழுந்தது. சண்டைகலைஞர்களின் கூச்சலினால் சற்று விலகிய சூர்யாவின் தோளில் அந்த கேமிரா விழுந்தது. இதனால் சூர்யா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். தற்போது நடந்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நசரத்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.