சலவைத் தொழிலாளியான சேரன், ஒரு பட்டதாரி. மனிதர்களுக்கான இறுதி சடங்குகளையும் செய்து வருகிறார். அவர் தனது தாய், தங்கை, மனைவி ஆகியோருடன் வசித்து வருகிறார். அவருடைய லட்சியம் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது. சேரனின் தங்கை டாக்டருக்கும் படித்து வருகிறார்.
இந்நிலையில் ஊர் பெரியவரான லாலின் மகன் துருவா, சேரனின் தங்கை தீப்ஷிகாவை காதலித்து வருகிறார். இது லாலுக்கு தெரியவருகிறது. இதனால் லால் & கோவினர் சேரனின் தங்கை தீப்ஷிகாவை அடித்து அவமானப் படுத்துகின்றனர். இந்த சம்பவம் கழித்து சில நாட்கள் கழித்து லாலின் அப்பா மு.ராமசாமி, இறந்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து இறுதி சடங்கு செய்ய, சேரனை அழைக்கின்றனர். சேரன் மறுக்க, மோதல் வெடிக்கிறது. ஊர் மொத்தமும் சேரனை தாக்க முற்படுகிறது. சேரன் கோர்ட்டுக்கு செல்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், தமிழ்க்குடிமகன் படத்தின் கதை.
முதல் சில காட்சிகளில், செயற்கையாக நடித்திருக்கும் சேரன், அதன் பின்னர் பரவாயில்லை! அவரது ஒரே மாதிரியான முகபாவனை, படத்தின் பலவீனம். சீறும் காட்சியிலும், சிரிக்கும் காட்சியிலும் ஒரே பாவனை!
சேரனின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா பரவாயில்லை.
துருவா, தீபிக்ஷா இவர்களுடைய காட்சிகள் படத்தின் பலமாக இருக்கிறது. இருவரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.
இவர்களைத்தவிர வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
இடைநிலை சாதியைச் சேர்ந்த, ஆதிக்க மனபான்மை கொண்டவராக நடித்திருக்கிறார், லால். தன்னுடைய நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். ஆதிக்க மனம் கொண்டவர்களை, கண்முன் நிறுத்துகிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு, சாம் சிஎஸ் இசை ஓகே!
எல்லா சூழ்நிலைகளும் மாறிவிட்டது, என்பதை சில காட்சிகள் மூலம் உணர்த்தும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், சில இடங்களில் இன்னும் இருக்கிறது. என்பதை உணர்த்துகிறார். இருவேறு பிரிவினர்களுக்கிடையே பகையினை மூட்டும், படங்களுக்கு இடையே இந்த மாதிரியான தெளிவான சிந்தனையோடு வரும் படங்கள், சினிமாவிற்கும் சமூகத்திற்கும் ஆரோக்யமானவை!
தமிழ்க்குடிமகன் – உரிமைக்குரல்!