‘தங்கலான்’ –  விமர்சனம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல் ராஜா தயாரிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், தங்கலான். இதில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல், அரி கிருஷ்ணன், அர்ஜுன், ப்ரீத்தி கரன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தியாவில், ஆங்கிலேயர்கள் மிராசுதார் மூலமாக வரி வசூல் செய்து, ஆதிக்கம் செலுத்தி வந்த காலக்கட்டம். நாகர்கள் கூட்டத்தினை சேர்ந்த சீயான் விக்ரம் தனது மனைவி பார்வதி, மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மிராசுதார் முத்துக்குமார் சதித் திட்டத்தால் சீயான் விக்ரமனுக்கு சொந்தமான நிலம் பறிக்கப்படுகிறது. இந்நிலையில், டேனியல் என்கிற ஆங்கிலேயர், கோலாரில் இருக்கும் தங்கத்தை வெட்டி எடுக்க விக்ரமை நியமித்து, அதற்கு கூலி தருவதாகவும் கூறுகிறார். தங்கத்தை வெட்டி எடுக்கும் முயற்சியின் இடையே, டேனியலிடமிருந்து தங்கச் சுரங்கத்தினை பாதுகாத்து நிற்கிறார். ஏன், எதற்கு? என்பது தான் தங்கலான் படத்தின் கதை.

தங்கலான் படத்தின் மிகப்பெரிய பலம், சீயான் விக்ரமும், அவரது நடிப்பும் தான். அதற்கடுத்தபடியாக பார்வதி. சிறப்பாக நடித்திருக்கிறார். இவர்களைப் போலவே, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல், அரி கிருஷ்ணன், அர்ஜுன், ப்ரீத்தி கரன், முத்துக்குமார் போன்றோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவும், ஆடை வடிவமைப்பும், கலை இயக்கமும் தங்கலான் படத்தின் தரத்தினை உயர்த்தியிருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. ‘மேனா மினுக்கி’ பாடல் அருமை.

வரலாற்றின் ஒரு மெல்லிய நூலிழயை கதையாக சித்தரித்த இயக்குநர் பா. ரஞ்சித், அதற்கான திரைக்கதையினை இன்னும் சற்று தெளிவாக சொல்லியிருக்கலாம். விக்ரம் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பேசும் வசனங்கள், பல காட்சிகளில் புரியவில்லை! இவை படத்தின் பெரும் பின்னடைவு! இதனால், பார்வையாளர்களால் தங்கலானை ரசிக்க முடியாமல் போகிறது.

மேக்கிங்கில் மிரட்டிய இயக்குநர் பா.ரஞ்சித், திரைக்கதையை சுவாரசியமாக கொடுப்பதில் திணறிவிட்டார்.

தங்கலான் படத்தினை நடிகர், நடிகைகளின் பங்களிப்பிற்காக மீண்டும் பார்க்கலாம்.

தங்கலான் – சீயானின் கண்கவர் அணிவகுப்பு!