‘தேள்’ : விமர்சனம்!

பிரபுதேவா, சம்யுக்தா, ஈஸ்வரிராவ், யோகிபாபு, பரணி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்திருக்க, இயக்கியிருக்கிறார் ஹரிகுமார். ‘ஸ்டுடியோ க்ரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், பொங்கல் வெளியீடாக வந்திருக்கிறது ‘தேள்’.

பிரபுதேவா நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலிருந்து ‘தேள்’ முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். அன்புக்கு ஏங்கும் ஒரு முரட்டுத்தனமான மனிதராக நடித்திருக்கிறார். எப்படி இருக்கிறது?

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு வட்டிக் கொடுத்து வருபவர் ஷத்ரு. அவரிடம் அடியாளாக வேலைசெய்கிறார் அநாதையாக இருக்கும் பிரபுதேவா. இவரது முக்கிய வேலை வாங்கிய பணத்தை சரியான நேரத்திற்கு கொடுக்காதவர்களை அடித்து, உதைத்து வசூல் செய்வதுதான்.  இதன் காரணமாக அவமானத்தால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் ‘நான் தான் உன்னுடைய அம்மா’ என பிரபுதேவாவிடம் பாசம் காட்டுகிறார் ஈஸ்வரி ராவ். இதனால் கடும் கோபத்திற்கு ஆளாகும் பிரபுதேவா அவரின் கைகளில் கத்தியால் குத்துகிறார். இதை பொருட்படுத்தாமல் ஈஸ்வரி ராவ் தொடர்ந்து பாசம் காட்டுகிறார். பல நாட்கள் கழித்து ஈஸ்வரிராவின் தாய் பாசத்திற்கு அடிமையாகிறார். அம்மா, மகன் இருவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். சில நாட்களில் ஈஸ்வரி ராவ் திடீரென்று காணாமல் போய்விடுகிறார். அவரை தேடிப்போகும் பிரபுதேவாவிற்கு பெரிய அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன? என்பது தான் ‘தேள்’ படத்தின் மீதிக்கதை.

காமெடி, கலாட்டா, டான்ஸ் என நடித்து வந்த பிரபுதேவா, இறுக்கமான முகத்துடன் முரட்டுத்தனத்தை காட்டி நடித்து இருக்கிறார். குறைவான வசனம் பேசி நிறைவாக நடித்திருக்கிறார். தன்னால் இப்படியும் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

சம்யுக்தா ‘பார் டான்ஸர்’ கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார்.  பிரபுதேவா ஆட வேண்டிய நடனத்தினையும் சேர்த்து புயல் வேகத்தில் பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார். ஒன்ஸ் மோர் கேட்க வைக்கிறது, இவரது நடனம்.

பிரபுதேவாவின் அம்மாவாக நடித்திருக்கும்  ஈஸ்வரி ராவ், பாசத்தைக்காட்டும் அம்மாவகவும் பழிவாங்கும் அம்மாவகவும் இருவேறு நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார். அழுத்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்கிறார்.

சம்யுகதா, யோகி பாபு வரும் சில காட்சிகள்  ரசிக்கவும் , சிரிக்கவும் செய்கிறது. பரணி, இமான் அண்ணாச்சி, மாரிமுத்து  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு, கோயம்பேடு மார்க்கெட் பகுதியினையும், சம்யுக்தா நடன காட்சியையும் அழகாக படம்பிடித்து, ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்கிறது. சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.

பிரபுதேவாவை வித்தியாசமாக நடிக்கவைத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஹரிகுமார்.