‘என்ன சொல்ல போகிறாய்’ : விமர்சனம்!

அஸ்வின் குமாருக்கும், அவந்திகா மிஷ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வினுக்கு தேஜு அஷ்வினியின் மேல் காதல் ஏற்படுகிறது. அஸ்வின் என்ன முடிவு எடுத்தார் என்பது தான் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் விரைவில் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை தனதாக்கி கொள்வார். பெண்களை கவரும் அவருடைய வசீகரம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. நிச்சியக்கப்பட்ட பெண்ணை விடமுடியாமலும், காதலித்த பெண்ணை கை பிடிக்க முடியாமலும் குழப்பமடையும் நேரத்தில் நல்ல நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அவந்திகா மிஷ்ரா , தேஜு அஷ்வினி இருவரும் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர். தேஜு அஷ்வினிக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டு விடாமல் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அஸ்வினின் நண்பராக வரும் புகழ் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. காமெடியும் அவருக்கு கைக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுவார்.

விவேக் – மெர்வின் இசையில் ‘க்யூட்டு பொண்ணு’,   ‘மாட்டிகிச்சு ஆடு.. ஸ்வீட் எடு கொண்டாடு..’ ஆகிய பாடல்கள் இசைக்கேற்ற நடன அமைப்பு, ஒளிப்பதிவு என ரசிக்க வைக்கிறது.

கலர்ஃபுல்லான ஒரு பேக்கிரவுண்டில்  சாதாரண ஒரு முக்கோண காதல் கதையை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் இயக்குநர் ஹரிஹரன். கதைக்கேற்ற அவருடைய திரைக்கதை அமைப்பு ரசிக்க வைக்கிறது. இருந்தாலும் ஒரு ஃபீல் வரவில்லை. படம் பார்ப்பவர்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கிறது.

‘என்ன சொல்ல போகிறாய்’ ஒரு முழுமையற்ற காதல் கதை!