‘தூக்கு துரை’ – விமர்சனம்!

ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர் தயாரித்துள்ள படம், தூக்கு துரை. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது. இதில், யோகி பாபு, இனியா,  ஜி. மாரிமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், மகேஷ், சென்றாயன், நமோ நாராயணன், அஷ்வின் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர்.

மன்னர் வம்சத்தினை சார்ந்தவர் மாரிமுத்து. அவரது முன்னோர் ஒருவர், மக்களின் நலனுக்காக தன் தலையை துண்டித்து, அந்த ஊர் அம்மனுக்கு அளித்தவர். இதன் காரணமாக அந்த வம்சத்தை சார்ந்தவர்கள் அந்த தலையை துண்டித்து கொண்ட, மன்னனின் கிரீடத்தினை அம்மனுக்கு வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அது ஒரு நாள் காணாமல் போகிறது. ஊரில் குழப்பம் ஏற்படுகிறது. அதோடு, யோகிபாபுவின் ஆவி, ஊர் மக்களை துன்புறுத்தி வருகிறது. காணாமல் போன கிரீடம் கிடைத்ததா? யோகிபாபு ஏன் ஆவியாக அலைகிறார்? என்பதற்கு விடை சொல்லும் படமே, தூக்கு துரை படத்தின் கதை.

ஊர்த் திருவிழாவில், பயாஸ்கோப் காட்டும் நபராகவும், இனியாவை கதலிப்பவராகவும் நடித்திருக்கிறார், யோகிபாபு. தனது வழக்கமான ஒன்றிரண்டு பஞ்ச் காமெடிகளுடன் சில காட்சிகளுக்கு மட்டும் வந்து போகிறார். இனியாவை காதலிக்கும் காட்சிகளிலும் வறட்சி, அவரது காமெடி காட்சிகளும் வறட்சியாக இருக்கிறது.

நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன் கூட்டணியினர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

ராஜ வம்சம், ஆணவக்கொலை, பேய் பிசாசு என அனைத்து கதைகளையும் சொல்ல முற்பட்டவர்கள், அதை சரியாக சொல்ல முடியாமல் திக்கித் திணறியிருக்கின்றனர்.

மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை. கிராபிக்ஸ் ஒரு சில இடங்களில் பராட்டும் படி உள்ளது.

ஒளிப்பதிவு, கலை, படத் தொகுப்பு, பின்னணி இசை ஆகியன கவனிக்கும் படி இருக்கிறது.

மற்றபடி, எதுவும் இல்லை!

தூக்கு துரை – மக்கு துரை!