‘ஜெய் விஜயம்’ –  விமர்சனம்!

ஜெய் ஆகாஷ் ஃபிலிம்ஸ் சார்பில். ஜெய் ஆகாஷ் தயாரித்து நடித்துள்ள படம், ‘ஜெய் விஜயம்’. இப்படத்தினை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார்,  ஜெய சதீஷன் நாகேஸ்வரன்.

நாயகன் ஜெய், ஹாலுசினேஷன் நோயால் பாதிக்கப்பட்டவர். தனது மனைவி அக்‌ஷயா கந்தமுதன், தங்கை மற்றும் அப்பா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஜெய்யை வெளியே தனியாக விடாமல் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், ஜெய்யின் மனைவி அக்‌ஷயா, தங்கை, அப்பா என அவருடன் இருக்கும் அனைவரும் பொய்யாக நடிக்கும் உண்மை, ஜெய்க்கு தெரிய வருகிறது. அவர்கள் ஏன், ஜெய்யை ஏமாற்றுகிறார்கள்? என்பதை சுவாரசியமாக சொல்ல முயற்சித்திருக்கும் படமே, ஜெய் விஜயம்.

நாயகனாக நடித்திருக்கும் ஜெய், ஹாலுசினேஷன் நோயால் பாதிக்கப்பட்டவராக, குழப்பமான மன நிலையை உடைய மனிதராக தனது நடிப்புத் திறமையினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அக்‌ஷயா கந்தமுதன், கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவர்களோடு, ஜெய்யின் தங்கையாக நடித்த நடிகை, அப்பா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் என, ‘ஜெய் விஜயம்’ படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும்,  குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளனர்.

ஜெய்க்கு உள்ள ஹாலுசினேஷன் நோய் மற்றும் அவரை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதை ரசிகர்களுக்கு, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெய சதீஷன் நாகேஸ்வரன், யூகிக்க முடியாத ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை, தன்னால் முடிந்த அளவிற்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, சொல்லியுள்ளார். ரசிகர்கள் யூகிக்க முடியாத அளவிற்கு இருப்பது படத்தின் பலம்.

அதே சமயம், மேக்கிங் மகா மட்டமாக இருக்கிறது.

பால் பாண்டியின் ஒளிப்பதிவும்,  சதீஷ்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார்.

மேக்கிங்கில் இருந்த பல குறைகளை தவிர்த்திருந்தால்… உண்மையிலேயே ஜெய் ஆகாஷூக்கு ஜெய் விஜயம்!