மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது.இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசுகையில்,
“உயிரே, உறவே தமிழே! இதை மட்டும் தமிழில் சொல்லிக் கொள்கிறேன். இதை ஆங்கிலத்தில் சொன்னால் நன்றாக இருக்காது. இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசுகிறேன். இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு பழக்கம். அதை 2 ஆயிரம் ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊடக நண்பர்கள் வந்துள்ளனர். எனக்கு கிடைத்த மிக அரிய வாய்ப்பு. பான் இந்தியா திரைப்படத்தை பற்றி பேசுகையால் நல்ல திரைப்படம் எல்லாமே இந்தியா திரைப்படம் தான். நாங்கள் இந்தியாவிற்காக தான் திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அவருடைய 11 வயதிலிருந்து என்னை பார்ப்பதாக அபிராமி கூறினார். அருகில் த்ரிஷா இருக்கிறார்கள். அதனை கொஞ்சம் கருத்தில் கொண்டு வயதை தவிர்த்திருக்கலாம். பரவாயில்லை, நான் அதையெல்லாம் தாண்டி வந்து விட்டேன். இப்போது அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. மணிரத்னத்திற்கும் எனக்கும் இடையில் இப்போதும் எதுவும் மாறவில்லை.
மணிரத்னமும் நானும் எல்டாம்ஸ் ரோட்டில் அமர்ந்து நிறைய பேசியிருக்கிறோம். நாங்கள் பேசியதில் 25 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். அதில் ஒன்று ‘நாயகன்’. மற்றொன்று ‘தக் லைஃப்’. இன்னும் நாங்கள் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பிரமாண்டமான படங்களை இணைந்து உருவாக்க இருக்கிறோம்.வியாபார கணக்கில் சிலரை படத்திற்குள் கொண்டு வருவார்கள். ஆனால் அதெல்லாம் தவறாகவும் போய் விடும். ஆனால் மக்கள் முடிவிற்கும் விருப்பத்திற்கும் விநியோகஸ்தர்கள் தலை வணங்கி விடுவார்கள். அப்படி தான் புதிய திறமைகள் இங்கே வந்திருக்கிறார்கள். அப்படி தான் சிம்பு வந்தார். அவரது அப்பாவும் அப்படி தான் வந்தார்.
நானும் ரஜினியும் அவரது படங்களின் வெற்றியைப் பற்றியை பேசி கொண்டிருப்போம். உங்களால் தான் நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம். இவர் வெறும் மணிரத்னம் கிடையாது. ஐந்தரை மணிரத்னம். தினமும் சரியாக காலையில் 5.30 மணிக்கு வந்திடுவார். ‘நாயகன்’ படத்திலிருந்தே அப்படி தான். 6 மணி ஷூட்டிங்குக்கு 5 மணிக்கே வந்துவிடுவார். படப்பிடிப்பு தளத்திலும் சினிமா பற்றி பேசினால் தான் அவரிடம் அரட்டை அடிக்க முடியும். இதை நான் இயக்குநர் பாலச்சந்தரிடம் பார்த்திருக்கிறேன். ரவி கே சந்திரன் அட்டகாசமான ஒளிப்பதிவை செய்திருக்கிறார். சிம்புவின் அப்பாவிற்கு என் மீது அளவு கடந்த பாசம். எனக்கு எதாவது ஒன்று என்றால், வந்து என் சட்டையை நனைத்து விடுவார். நெஞ்சில் சாய்ந்து அழுது விடுவார்.
அப்பா 8 அடி என்றால், மகன் சிம்பு 16 அடி பாய்வார். பாசத்தில் தந்தையை மிஞ்சிவிட்டார். பொறாமையும், போட்டியும் நிறைந்த இந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது கஷ்டம். 45 ஆண்டுகளுக்கு முன்பு நானும் மணிரத்னமும் பேசியதை இன்று சாத்தியமாக்கியுள்ளோம். நாங்கள் படித்ததே சினிமா தான். இந்தப் படத்தில் நீங்க எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும். ஆனால் வேறு மாதிரி இருக்கும்.மணிரத்னம் முதன் முறையாக ராஜ் கமல் நிறுவனதில் படம் இயக்கியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கிறது என நீங்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள் அதனால் தான் இந்த நம்பிக்கை.நான் இப்போது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தால் கூட சினிமா பற்றி தான் பேசுவேன். நீங்க கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும். பார்த்த சினிமாவையே நீங்க பார்பீங்களா? அதனால் இந்த படம் வேறு மாதிரி இருக்கும். நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். கற்று கொண்ட விசயங்களையும் மறக்கிறேன்.
நான் பாடல் வேறு எழுதியுள்ளேன். அது வைரமுத்துவை மிஞ்சுவதற்கு இல்லை. இவர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை. மொழி போர் நடந்து கொண்டிருக்கிற நேரம் இது. அதான் ஜிங்குச்சா என்ற வார்த்தையில் எழுதினோ. அது சீன வார்த்தையாக கூட இருக்கலாம். அந்த ஐடியாவை ரஹ்மான் தான் கொடுத்தார். இது எங்களுடைய மும்மொழி திட்டம்” இவ்வாறு அவர் பேசினார்.