டிரிக்கர் – விமர்சனம்!

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், டிரிக்கர். அதர்வா  கதாநாயகனாகவும், தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சீதா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, ராகுல்தேவ் ஷெட்டி, அன்புதாசன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திறமையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அதர்வா. இவர் கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கும்பலிடம் மாட்டிக்கொண்ட ‘போலீஸ் இன்ஃபார்மரை’ காப்பாற்றும் வகையில், கடத்தல்காரர்களை உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவின்றி என்கவுன்டர் செய்து காப்பாற்றுகிறார். இதனால் அதர்வா மீது போலீஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது. இதன்காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

ஆனால், அதர்வாவின் தனித்திறமையின் மீது நம்பிக்கை கொண்ட போலீஸ் கமிஷனர் அழகம்பெருமாள், அவரை ரகசிய உளவுப்பிரிவுக்கு பணியமர்த்துகிறார். இந்த ரகசிய உளவுப்பிரிவில் அதர்வாவுடன் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

பல்வேறு குற்றப்பின்னணியில் இருப்பவர்களுடன் தொடர்பு வைத்துள்ள போலீஸாரை ஆதாரத்துடன் பிடிப்பதற்கு கமிஷனர் அழகம் பெருமளுக்கு உதவுகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச குழந்தை கடத்தல்காரன் ஒருவன் அதர்வாவின் அண்ணன் குழந்தையை கடத்துகிறான். அவனை தேடிச்செல்லும் அதர்வாவுக்கு, அவருடைய அப்பா அருண்பாண்டியன் சம்பந்தப்பட்ட பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அண்ணன் குழந்தையை மீட்டார்களா? இல்லையா? அப்பா அருண்பாண்டியன் சம்பந்தப்பட்ட விஷ்யம் என்ன என்பது தான் ட்ரிக்கர் படத்தின் கதை.

அடிதடி காட்சிகளில் அதர்வா ஆக்ரோஷமாக பாய்ந்து, பறந்து அடிக்கிறார். காதல் காட்சிகள் பெரிதாக இல்லை. என்றாலும் கிடைத்த ஒரு சில காட்சிகளில் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளார்..

நாயகியான தான்யா ரவிச்சந்திரனுக்கு மிகக் குறைந்த காட்சிகளே.. கொடுத்த வேலையை சரியாகவே செய்திருக்கிறார். நடிப்புத் திறமைக்கோ, நடனத்திறமைக்கோ காட்சிகள் இல்லை.

தமிழ்சினிமாவின் புதிய  வில்லனாக,  ‘மைக்கேல்’ கேரக்டரில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ஷெட்டி தோற்றத்தில் மிரட்டலாக இருந்தாலும் காட்சிகளில் வலுவில்லை. இவரை இயக்குனர்கள் சரியாக பயன்படுத்தினால், தமிழ்சினிமாவில் ஒரு ‘மிரட்டல்’ வில்லனாக வலம் வருவார்.

சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்புதாசன், அறந்தாங்கி நிஷா  இந்த நால்வரில் சின்னிஜெயந்த் மனதை தொடுகிறார். இவரை வில்லன்கள் வெட்டும் காட்சிப்போல் படத்தின் எல்லாக் காட்சிகளையும் அமைத்திருந்தால் ஒரு பரபரப்பு இருந்திருக்கும்.

இயக்குனர் சாம் ஆண்டன், காட்சியமைப்பினையும், அதர்வாவின் அப்பா அருண் பாண்டியன், ராகுல் தேவ் ஷெட்டி உள்ளிட்ட கதாபாத்திரங்களை இன்னும் வலிமையுடன் வடிவமைத்திருக்கலாம்.

மொத்ததில் டிரிக்கர் சுமாரான ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படமாக  இருக்கிறது.