திரைப்பட நடிகர், இயக்குநர் உபேந்திரா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ‘யுஐ’ (UI). இது ஒரு ஃபேண்டஸி படம்.
இன்றைய சமூக அரசியலை, நக்கலும் நையாண்டியுமாக அனைவரும் அமோதிக்கும் பிரச்சனைகளை அதிரடியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் உபேந்திரா படம் துவங்குவதற்கு முன்னர், ‘நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன்னே தியேட்டரை விட்டு சென்றுவிடுங்கள்’ என்ற வாசகத்தை போட்டு பகீர் கிளப்புபவர், அடுத்தடுத்த காட்சிகளில் அதிர வைக்கிறார்.
இயக்குநர் உபேந்திரா, சத்யா மற்றும் கல்கி என இரட்டை வேடங்களில் சத்யாவாக மென்மையாகவும், கல்கியாக சர்வாதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சிகளுக்காகவும், ரசிகர்களை கிறங்கடிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், சது கோகிலா என அனைவரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!
ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவினை விட, வி.எஃப்.எக்ஸ் கலைஞருக்கும், கலை இயக்குநருக்கும் தான் வேலை அதிகம்.
எழுதி இயக்கியிருக்கும் உபேந்திரா, நவீன காலத்திய உள்ளூர் முதல் உலக அரசியல் வரை அனைத்தும் உணமை என்பதை, படம் பார்க்கும் போதே தெரியப்படுத்தி விடுகிறார். நவீன ஐ போன் இலவசமாக அரசு கொடுக்கும் காட்சியில் இன்றைய அரசியல் அவமானப்பட்டு நிற்கிறது. எல்லாமே குறியீடாக பேசப்பட்டிருப்பதால் சிலர் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும்.
ஒழுங்கான சாக்கடை, சாலைகள், உணவுகள் இல்லாத நிலையில் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மக்களுக்கு உணவு இல்லாமல் இயற்கை வளங்களை அழித்து, ஆயுதங்களை வாங்கி குவிப்பது, அரசியல்வாதிகளின் கமிஷன் போன்ற காட்சிகள் சிறப்பானதாக இருக்கிறது.
கடவுள் வந்தால் வரும். மதம் வந்தால் சாதி வரும். சாதி வந்தால் சண்டை வரும் எனவே கடவுள் வேண்டாம். எனும் சத்யா, சாதி, மதம் இல்லாமல் ஒற்றுமையாகவும், அன்பாகவும் மக்களை வாழ வைக்கிறார். ஆனால் கல்கி, கடவுள் பெயரால் மக்களை பிளவு படுத்தி, அரசியல் செய்கிறார்.
இதை மக்கள் தங்களது மூளைக்கு வேலை கொடுத்து வாழ்க்கையை சிறப்பாக ஆக்கிக்கொள்ள, தேர்தலில் சரியானவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று ‘யுஐ’ படத்தின் மூலம் பிரச்சாரம் செய்திருக்கிறார். எடுபடுமா, அவரது பிரச்சாரம்?
‘யுஐ’ பல படங்களில் சொல்லப்பட்ட கருத்து தான்! இதில், 2K கிட்ஸ்களுக்காக வித்தியாசமான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.