குட்டி சிங்கம் முஃபாசா, வசிக்குமிடத்திலிருந்து செழிப்பான ‘மில்லேலே’ வனப்பகுதிக்கு தனது பெற்றோருடன் செல்கிறது. செல்லும் வழியில் காட்டாற்று வெள்ளத்தில் குடும்பத்துடன் சிக்கிக் கொள்கிறது. முஃபாசா வெள்ளத்தில் வேறு ஒரு பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு அங்கு வசிக்கும் சிங்கக் கூட்டத்தின் இளவரசன் ‘டாக்கா’ குட்டி சிங்கத்தாலும் அவனது அம்மாவாலும் காப்பாற்றப்படுகிறது. நாளடைவில், டாக்காவும் முஃபாசாவும் சகோதரர்களைப்போல் வளர்ந்து பருவமடைகின்றனர்.
முஃபாசாவுக்கு, டாக்காவின் தாய் வேட்டையாட கற்றுக்கொடுக்கிறது. அந்த சமயத்தில் கொடூரமான மற்றொரு சிங்கக்கூட்டத்தினர் டாக்காவின் தாயை தாக்குகின்றனர். அப்போது நடக்கும் சண்டையில், முஃபாசா அந்தக்கூட்டத்தின் இளவரசனை கொல்கிறது. இதை அறிந்த அந்தக்கூட்டத்தின் ராஜா பழிவாங்க அந்த கொடூரமான சிங்கக்கூட்டம் வருகிறது. இந்நிலையில், சகோதரர்களாக இருந்த டாக்காவுக்கும் முஃபாசாவுக்கும் பகை உருவாகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான், ‘முஃபாசா : தி லயன் கிங்’ திரைப்படத்தின் பரபரப்பான திரைக்கதை.
‘முஃபாசா : தி லயன் கிங்’ திரைப்படத்தில், அன்பு, பாசம், காதல், துரோகம், பழி வாங்குதல் என ஒரு கமர்ஷியல் படங்களுக்குரிய அனைத்தும் அம்சமாக அமைந்திருக்கிறது. சிறுவர் சிறுமிகளுடன் குடும்பத்தினருடன் ஏற்ற படமாக இருக்கிறது.
சிங்கக்கூட்டங்கள் மோதி கொள்ளும்போதும், முஃபாசா மில்லேலே வனப்பகுதியினை தேடிப்போகும் வழிகளில் நடக்கும் போராட்டம், சாகசம் என அனைத்து கிராபிக்ஸ் காட்சிகளும் அட்டகாசமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முஃபாசா, டாக்கா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்திருக்கும் நடிகர்கள் நாசர், அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் ஆகியோரது பங்களிப்பு நன்றாக இருக்கிறது.
‘ரஃபிக்கி’ என்ற பபூன் குரங்கு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் ‘விடிவி கணேஷ்’ சிரிக்க வைக்கிறார். அவரது “இங்கே என்ன சொல்லுது…” டைலாக், கைதட்டல் பெறுகிறது.
அர்ஜுன் தாஸின் கம்பீர குரலில் முஃபாசா கதாபாத்திரமும், அசோக் செல்வனின் மெல்லிய குரலில் டாக்காவின் முக்கிய கதாபாத்திரங்களோடு, மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்க வைக்கின்றன.
டிமோன் மற்றும் பும்பா கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்திருக்கும் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.
’முஃபாசா : தி லயன் கிங்’ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. என்றாலும் ரசிக்கலாம்!