உறியடி படத்தின் மூலம் சாதி அரசியலை தோலுரித்தவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் விஜயகுமார். உறியடி 2 படத்தின் மூலம் போபாலில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து கசிந்த ‘மீத்தைல் ஐசோ சயனேட்’ விஷ வாயு சம்பவத்தை நினைவுபடுத்தியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை என்பது தான் பெரிய சோகம்.
கெமிக்கல் இஞ்சினியரிங் படித்த விஜயகுமாருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் அவர்களின் கிராமத்து அருகிலிருக்கும் எந்தவிதமான பாதுகாப்பு, விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துவரும் கெமிக்கல் இன்டஸ்ட்ரியில் வேலைக்கிடைக்கிறது. ஒரு நாள் நடக்கும் விபத்தில் அவரது நண்பர் ஒருவர் இறக்கிறார். அதற்கு காரணம் அந்த கெமிக்கல் இன்டஸ்ட்ரியில் விருந்து வெளியான விஷவாயு தான் காரணம் தெரிய வருகிறது. இது குறித்து நிர்வாகிகளிடம் கூற அதை அலட்சியம் செய்கிறது நிர்வாகம்.
இந்நிலையில் திடிரென ஒரு நாள் நள்ளிரவில் அந்த கெமிக்கல் இன்டஸ்ட்ரியின் பாய்லர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த பாய்லர் வெடித்து சிதறினால் அருகிலிருக்கும் கிராமங்களில் வசிக்கும் உயிர்கள் அனைத்தும் உயிரிழக்கும் அபாயம் உருவாகிறது. விஜயகுமார் என்ன செய்தார் நிர்வாகம் என்ன செய்தது என்பது தான் “உறியடி 2′ படத்தின் திக் திக் கிளைமாக்ஸ்!!!
உயிர்கொல்லும் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு உலக நாடுகள் தடை விதித்த போதும் அது எப்படி இந்தியாவுக்குள் நிறுவப்படுகிறது. அதற்கு துணை நிற்கும் அமைப்புகள் எது என்பதை பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார்கள். மக்களின் போராட்டங்களை பிசுபிசுக்கச் செய்யும் அதிகார அமைப்பு , சாதி அரசியல் , அடக்குமுறை ஆகியவற்றை விஜயகுமாரை போன்ற ஒரு சிலரே போல்டாக சொல்லியிருகிறார்கள். படத்தில் வரும் வசங்கள் ஒவ்வொன்றும் தீப்பொறியாய் பொறிந்து கனலாக தகிக்கிறது.
படம் ஆரம்பித்த 20 நிமிடங்கள் லவ், ஜாலி என கொஞ்சம் போரடித்தாலும் அதன் பிறகு வரும் சம்பவங்கள் நெஞ்சை படபடக்க வைக்கிறது. அதிலும் போலீஸ் உடையில் விஜயகுமாரையும் அவரது நண்பரையும் கொலை செய்ய முயலும் காட்சி சூப்பர்.
விஜயகுமார் வசனங்களை வெளிப்படுத்திய விதமும், அதற்கான காட்சியமைப்பும் (குறிப்பாக தொலைக்காட்சியில் நடக்கும் விவாதத்தில்) ரசிகர்களிடத்தில் கைதட்டல்களைப் பெற்றிருக்கின்றன. கேமிரா, எடிட்ங்கும் இரண்டும் மிடட்டியுள்ளது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை பல காட்சிகளில் திக்.. திக்.. திகிலூட்டினாலும் சில காட்சிகளில் அதிகப்படியான சத்தம் கடுப்படைய வைக்கிறது.
எதார்த்தமான இளைஞன் விஜயகுமார்,‘பரிதாபங்கள்’புகழ் சுதாகர், சாதிக்கட்சியின் தலைவராக வருபவர், நாயகி விஸ்மயா என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
இன்ட்ரஸ்ட்டான ஒரு நல்ல படம் கொடுக்கனும்னா ஸ்க்ரிப்ட் எழுதும் திறமை இருந்தால் மட்டும் போதும். மற்ற சினிமா ஜிகினாக்கள் தேவையில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் விஜயகுமார்.
இயக்குனர் விஜயகுமார் கொடுத்திருக்கும் வீரியமிக்க வரலாற்று பதிவு.