‘வாழை’ –  விமர்சனம்!

டிஸ்னி ஹாட் ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் ப்ரொடக்சன் இணைந்து தயாரித்துள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் எழுதி இயக்கியிருக்கிறார். M.பொன்வேல், R. ராகுல், ஜானகி, திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல், பத்மன், ஜே. சதீஷ்குமார் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு பகுதியினை, அதாவது எட்டாம் வகுப்பு (1988-89) படித்து கொண்டிருந்த போது, துத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் மற்றும் கீழ நாட்டார் குளத்தைச் சேர்ந்த வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்கள், வாழைத்தார் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரியின் மேல் அமர்ந்து சென்றபோது ‘பேட்மாநகரம்’ அருகே அந்த லாரி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தினை மைய்யமாக வைத்து வாழை படத்தினை உருவாக்கியிருக்கிறார், இயக்குநர் மாரி செல்வராஜ்.

வாழைத்தார்களை சுமக்கும் விவசாயக்கூலி குடும்பத்தை சேர்ந்த சிவனைந்தன் அம்மா மற்றும் அக்காவின் பராமரிப்பில் இருந்து வருகிறார். பள்ளிப் படிப்பில் அனைத்து பாடங்களிலும் சிறந்து விளங்குபவர். சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாளில், வாழைத்தார் சுமந்து குடும்ப வருமானத்திற்கு தனது பங்கினை செலுத்தி வருகிறான். ஒரு சனிக்கிழமை, பள்ளி விடுமுறை நாளில் அம்மாவிடம் வாழைத்தார் சுமக்க செல்வதாக ஏமாற்றிவிட்டு, பள்ளியில் நடக்கும் டான்ஸ் ரிகர்சலில் கலந்து கொள்ளச் சென்றுவிடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது  என்பது தான் வாழை.

படத்தின் முதல் பாதியில் ரஜினி ரசிகர், கமல் ரசிகர் இடையே இருக்கும் சின்னச் சண்டைகள், டீச்சரிடம் ஏற்படும் ஒரு ஈர்ப்பு என படம் கலகலப்பாகச் செல்கிறது. அதன் பிறகு வாழைத்தாருடன் வலிமிகுந்த வாழ்க்கையும் பசியும். ‘’கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’’. ஔவையாரின் இந்த வரிகளை விட, மாரி செல்வராஜின் காட்சிகள் வலிமை மிகுந்ததாக இருக்கிறது.

பூங்கொடி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிகிலா, தனது நடிப்பின் மூலமாக  பலரையும் அவர்களது பள்ளிக்காலத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்.

M.பொன்வேல், R. ராகுல் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காலில் வேண்டுமென்றே முள்ளினை குத்திக்கொண்டு ரத்தம் வரச்செய்து, ராகுல் அவர் அம்மாவிடம் மாட்டிக்கொள்ளும் காட்சியில், ரஜினி கமல் இருவரையும் மைய்யப்படுத்தி  இடம் பெறும் வசனங்கள் சூப்பர். மொத்த தியேட்டரும் சிரிப்பலை. இந்தக் காட்சியில் R. ராகுல்  நடிப்பு அல்ட்டிமேட்!

M.பொன்வேல் க்ளைமாக்ஸ் காட்சியில் கலங்கடித்து விடுகிறார். இவரின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன் அனைவருமே கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணனின் தன் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

‘வாழை’ – உயிரோட்டமான படைப்பு!