பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், ரவிமரியா, ஜோன் விஜய், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், சேஷு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், வடக்குப்பட்டி ராமசாமி. எழுதி, இயக்கியிருக்கிறார், கார்த்திக் யோகி.
1960களில் ‘வடக்குப்பட்டி’ கிராமத்தில் நடக்கும் கதை. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது, மண்பாண்டத் தொழில் செய்து வரும் சந்தானத்தின் குடும்பம். இதனால், சாமியின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. அதன் மீது வெறுப்பாக இருக்கிறார். இந்நிலையில், ஊருக்குள் தொல்லை கொடுத்து வந்த காட்டேரியை, அம்மன் ஊரிலிருந்து விரட்டியதாக மக்கள் நம்புகின்றனர். அதோடு மண் பானை வடிவமாக சந்தானத்தில் நிலத்தில் தோன்றியதாகவும் நம்புகின்றனர். இதை தனது புத்திசாலித் தனத்தால், சந்தானம் அந்த ஊர் மக்களை ஏமாற்றி சிறப்பாக வாழ்கிறார்.
வடக்குபட்டிக்கு தாசில்தாராக வரும் தமிழ், சந்தானத்தின் தில்லாலங்கடி வேலையினை தெரிந்து கொண்டு, கோவில் வருமானத்தில் பங்கு கேட்கிறார். இதனால், இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. தாசில்தார் தமிழ், கலெக்டரின் உதவியோடு கோவிலை இழுத்து மூடுகிறார். கோவிலின் மூலம் வரும் சந்தானத்தின் வருமானமமடியோடு நின்று போகிறது. மீண்டும் கோவிலை திறக்க முயற்சிக்கிறார், சந்தானம். அதை தடுத்து வருகிறார், தமிழ். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ஜாலியான திரைக்கதை.
இயக்குனர் கார்த்திக் யோகி, ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ரசிகர்கள் சந்தானத்திடம், என்ன எதிர்பார்த்தார்களோ, அதை அப்படியே கொடுத்துள்ளதால் சந்தானத்தின் ரசிகர்கள் ஹேப்பி.
லொள்ளு சபா கூட்டணியினரான சந்தானம், மாறன், சேஷு ஆகியோரின் காமெடிக்காட்சிகள் எல்லோரையும் சிரிக்க வைக்கும், சில கடிக்காமெடிகள் நீங்கலாக! பல இடங்களில், சந்தானத்தின் காமெடியை ஓரம் கட்டிவிடுகிறது, சேஷுவின் காமெடி. அதிலும் சேஷூவின் பரதநாட்டியம் சூப்பர்.
இவர்களை எல்லோரையும் விட அல்ட்டிமேட், நிழகள் ரவி தான். மன நிலை பாதிக்கப்பட்டவராக ‘கன்னி வெடி’ காமெடியில், சிரிப்பலையால் மொத்தத் தியேட்டரும் அதிருகிறது.
இப்படி, படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் காமெடிக்காட்சிகளும் லாஜிக்கை மறந்து சிரிக்க வைக்கின்றன.
எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ், இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின், கல்கி என படத்தில் நடித்த, அனைத்து நடிகர்களும் சிரிக்க வைக்கிறார்கள்.
பக்திக்கும், மூட பக்திக்கும் இடையே இருக்கும் விஷயங்களை அழுத்தமாக சொல்ல முடியாமல், ஒரு நகைச்சுவையான படமாக கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார், இயக்குனர் கார்த்திக் யோகி.
மொத்தத்தில், இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சிரிப்பு பட்டி ராமசாமி!