பிரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டி-சீரிஸ் (T-Series) கூட்டணியில், ஓடிடி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ (Vadhandhi Season 2 – The Mystery of Mani) தொடரின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சீரிஸின் முதல் சிங்கிள் பாடலான ‘தெய்வா’ (Dheiva Song) இன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த விறுவிறுப்பான மர்மத் தொடர், வரும் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளின் டப்பிங் பதிப்புகளுடனும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளின் சப்டைட்டில்களுடன் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சீரிஸ் வெளியாகிறது.
மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் ஆற்றல்மிக்க சூழலையும் மையமாகக் கொண்டு இந்த வதந்தி சீசன் 2 மர்மக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நேர்மையான காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ரஸா (எம். சசிகுமார்), நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவின் போது தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டின் மர்மத்தை விசாரிக்கிறார். அந்த அதிரடி விசாரணை, ‘மணி’ என்ற மர்ம கைதியை நோக்கிச் செல்ல, வதந்திகள், ஏமாற்றங்கள் மற்றும் புதைக்கப்பட்ட ரகசியங்கள் நிறைந்த ஆபத்தான வலையில் அவர் சிக்கிக் கொள்கிறார்.

இந்த சீரிஸின் உள்ளூர் கலாச்சார சுவையைப் பிரதிபலிக்கும் விதமாக, ‘தெய்வா’ பாடல் அதன் துள்ளலான இசை மற்றும் உற்சாகமான தாளங்கள் மூலம் அந்த உலகத்தை உயிர்ப்பிக்கிறது. சைமன் K. கிங் (Simon K. King) இசையமைத்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை, அவரோடு இணைந்து யஷ்வந்த் பாடியுள்ளார். மணி ரோமியோ எழுதியுள்ள கவர்ச்சிகரமான வரிகளுடன் வெளியாகியுள்ள இப்பாடலின் வண்ணமயமான மியூசிக் வீடியோவில் உற்சாகமான நடன அமைப்புகள், படப்பிடிப்பு தளத்தின் பின்னணிக் காட்சிகள் (Behind-the-scenes BTS) மற்றும் நடிகர்களின் சுறுசுறுப்பான தருணங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் தற்போது அமேசான் மியூசிக், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக் கிடைக்கிறது.
புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் பிரம்மாண்ட கூட்டணிஆண்ட்ரூ லூயிஸ் (Andrew Louis) உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனம் சார்பில் பிரபல இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி (Pushkar & Gayatri) கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். எம். சசிகுமார் (M. Sasikumar) முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸில், யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.