ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை வசதி செய்யக்கோரி வைகோ வலியுறுத்தல்!!!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு ‘ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை’ வசதி செய்யக்கோரி கடிதம் விடுத்துள்ளார்.

அதன் விபரம் பின்வருமாறு…

மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

இதுவரையிலும், ரயில் என்ஜின்களில் கழிப்பு அறைகள் இல்லை; அடுத்த பெட்டிக்குச் செல்வதற்கான வழியும் இல்லை; இதனால், ரயில் என்ஜின் பைலட்டுகளும், உதவியாளர்களும், இயற்கை அழைப்புகளுக்காகத் தவிக்கின்ற நிலை உள்ளது. தொடரி நிலையங்களில் ரயில்கள் நிற்கின்ற நேரமும் குறைவாக இருப்பதால், அங்கே உள்ள கழிப்பு அறைகளைப் பயன்படுத்துவதற்கும் உரிய நேரம் கிடைப்பது இல்லை.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினையை, எங்களுடைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் முன்னணியினர், இன்று எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

2013-14 ஆம் ஆண்டுக்கான இந்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, என்ஜின்களில் கழிப்பு அறை வசதி ஏற்படுத்தப்படும் என, ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

2014 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் ஆணையம், இந்தப் பிரச்சினையை ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு நினைவூட்டி, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆனால், இதுவரை எந்தப் பயனும் இல்லை.

முன்பு தொடரிகளில், பயணச் சீட்டு பரிசோதகர்களுக்கு, படுக்கை வசதி கிடையாது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதுடன், ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கையும் விடுத்தேன். அதன் விளைவாக, அவர்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

அண்மைக்காலமாக, ரயில் என்ஜின் பைலட்டுகளாக பெண்களும் பயிற்சி பெற்றுப் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தாங்கள் இந்தப் பிரச்சினையையில் உடனடி கவனம் செலுத்தி, ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.