‘வல்லான்’ – விமர்சனம்!

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி, புலணாய்வு செய்வதில் மிகச்சிறந்தவர். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தன்யா ஹோப், காணாமல் போன வழக்கை விசாரிக்கும் சுந்தர்.சிக்கும் அவரது உயரதிகாரிக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனிடையே பிரபலமான தொழிலதிபர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரித்து வரும் காவல் துறைக்கு, எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை. இதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ,போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் அன் அஃபிஷியலாக இன்னொரு உயரதிகாரியால் தொழிலதிபர் கொலை வழக்கு கொடுக்கப்படுகிறது.  சுந்தர்.சி அதை புலணாய்வு செய்யும்போது பல மர்மங்கள் வெளியாவதோடு, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தன்யா ஹோப் பற்றிய விபரங்களும் கிடைக்கிறது. இதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்லும் திரைக்கதை தான், ‘வல்லான்’.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்‌ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் ஓகே வான நடிப்பினை கொடுத்திருக்கிறார். தன்யா ஹோப் உடனான காட்சிகளிலும், மிடுக்கான தோற்றத்திலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கிறார்.

தன்யா ஹோப் அழகான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவு இருந்தபோதும், கிடைத்த காட்சிகளில் நடித்து தனது இருப்பினை பதிவு செய்கிறார்.

ஹெபா பட்டேல், திரைக்கதையின் நகர்வுக்கும், கவர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கிறார்.

தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே ஆகியோரும் திரைக்கதை நகர்வுக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன், ஒரு கொலை, அதை சுற்றி நடக்கும் மர்மமான நிகழ்வுகள் இவற்றை யூகிக்க முடியாதபடி க்ளைமாக்ஸ் வரை தொய்வில்லாத திரைக்கதையின் மூலம் ‘வல்லான்’ படத்தினை ரசிக்க வைத்திருக்கிறார்.