‘குடும்பஸ்தன்’ –  விமர்சனம்!

மணிகண்டனும், சான்வி மேக்னாவும் இருவேறு சாதியைச்சேர்ந்தவர்கள். இருவருமே காதலர்கள். இவர்களது காதலுக்கு, இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குடும்பத்தினரின் எதிர்ப்பினை மீறி, பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு மணிகண்டனின் குடும்பத்தினரோடு இருவரும் வசித்து வருகின்றனர். சான்வி மேக்னா கர்ப்பமடைகிறார். குடும்பத்தின் தேவைகள் அதிகரிக்கிறது. மொத்த குடும்பத்தின் பொறுப்பும் மணிகண்டனுக்கு வருகிறது. இதனிடையே அலுவலகத்தில் நடக்கும் ஒரு பிரச்சனையால், மணிகண்டனின் வேலை பறிபோகிறது. இதை குடும்பத்தினரிடமிருந்து மறைத்து கடன் வாங்கி சமாளிக்கிறார். கடன் கொடுத்தவர்கள் விரட்ட, அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பது தான், குடும்பஸ்தன் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மணிகண்டனுக்கு குடும்பஸ்தன் திரைப்படமும் வித்தியாசமானது தான். வளைந்து கொடுத்து வாழும் மனிதர்களையும், நேர்மையாக எதற்கும் வளைந்து கொடுக்காமல் வாழ்ந்து வருபவர்களையும் முன்னிருத்தி, மணிகண்டன் மற்றும் குரு சோம சுந்தரம் ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாக வடிவமைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார், இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி.

நாயகன் மணிகண்டன், தனது இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுகிறார். பல இடங்களில் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பதுடன் சில இடங்களில் கண் கலங்கவும் வைக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்திருக்கிறார். இவருக்கும் சான்வி மேக்னாவுக்குமான நெருக்கமான காட்சிகள் உயிரோட்டமாக இருக்கின்றன. இளம் கணவன், மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். குரு சோமசுந்தரத்திற்கும் இவருக்குமான காட்சிகளில் சிரிப்பு!

நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, அந்த கதாபாத்திரத்தை வெகு இயல்பாக கையாண்டிருக்கிறார். நடிப்பு அட்டகாசமாக வருகிறது. எந்தக்காட்சியிலும் திணறவில்லை. எல்லாக்காட்சிகளிலுமே தனது தனித்திறமையினை காட்டியிருக்கிறார். மாமியாரிடம் வம்படிக்கும் காட்சிகள் சிறப்பு. படத்தில் நடித்தவர்களிடையே, நடிப்பில் முதலிடம் பிடித்துக்கொள்கிறார்.

மணிகண்டனின் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன், தனது வழக்கமான நடிப்பின் மூலம் தனித்து நிற்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் மலையாள நடிகை குடாசனத் கனகம், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளனர். அதோடு திரைக்கதை தொய்வில்லாமல் இருக்கவும் பயன்பட்டிருக்கிறார்கள். சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் சூப்பர். சீனா செல்ல இவர் தயாராகும் காட்சிகள் கார்ப்பொரேட் கோமாளிகளை கண்முன் நிறுத்துகிறது.  பணம் மட்டுமே முக்கியம் என்று வாழும் இவரது கதாபாத்திரம், க்ளைமாக்ஸில் பரிதாபப்பட வைத்து விடுகிறது.

ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் பலமாக இருக்கிறது.

இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலமாக இருக்கிறது.

பிரசன்னா பாலச்சந்திரனின் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது. சாதி குறித்த வசனங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை.

கதை, திரைக்கதை எழுதியிருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூட்டணி ரசிக்கும்படியான படத்தினை கொடுத்துள்ளனர்.

இதுபோன்று பல படங்கள் வந்திருந்தாலும் ‘குடும்பஸ்தன்’ தனித்து நிற்கிறது!