வசந்தபாலன் இயக்கிய ‘மக்களை தேடி மருத்துவம்’ குறும்பட வெளியீட்டு விழா!

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன், திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்.  தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்.

அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு குறும்படமாக தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும்.

நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி உருவாகியுள்ள ‘தலைவன்’ என்கிற குறும்படத்தையும் வெளியிடும் விழா இன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, இயக்குனர் இமயம் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபு ராஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் நடிகருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் படக்குழுவினருடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தலைவன் குறும்படத்தை அமைச்சர் சாமிநாதன் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது,

“மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது. தமிழர்களையும் தமிழையும் காக்கும் முயற்சியில் மு.க ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் அதேபோல சினிமாவிற்கு தேவையான நலத்திட்டங்களை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அடுத்தடுத்து அறிவிப்பார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. தயாரிப்பாளர் சிவா எப்போதுமே பொதுநலன் கருதி பல் விஷயங்களில் ஈடுபடுபவர்.. அதனால் தான் இப்படி ஒரு முயற்சி எடுத்துள்ளார்.. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

 

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசும்போது,

“தேர்தல் முடிந்ததும் அந்த சமயத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்ததால் அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதும் அதிலேயே கவனம் செலுத்தும்படி முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.. அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக கலந்து கொள்கிறேன்..

மக்களை தேடி மருத்துவம் என்கிற இந்த திட்டத்தை சினிமா வாயிலாக மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுத்த தயாரிப்பாளர் சிவா, சிங்கார வடிவேலன் ஆகியோரை பாராட்டுகிறேன்.. இதேபோன்று மாண்புமிகு கலைஞர் ஆட்சியில் வருமுன் காப்போம் என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் இடையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அந்த திட்டம் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கப்பட்டுள்ளது..

இதுதவிர இன்னுயிர் 48 என்கிற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாம் சாலையில் செல்லும்போது யாராவது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்ப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இது. பாதிக்கப்பட்டவருக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது இந்த திட்டத்தின் அவசியத்தை நானே நேரில் உணர்ந்துள்ளேன். கலைஞருடன் பிரச்சாரத்துக்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டார். வேகமாக அவரை சென்று தூக்கி எனது காரிலேயே அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். அன்று இந்த திட்டம் இருந்திருந்தால் எனக்கு 5000 ரூபாய் கிடைத்திருக்கும்” என்று இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினார் அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன்.