உழைக்கும் உங்களைச் சிறுமைப்படுத்த நினைப்பவர்களைப் பொறுமையுடன் புறந்தள்ளுங்கள். பெண் ஓட்டுநர்கள் மத்தியில் நடிகை அனுமோல் உருக்கமான அறிவுரை!
சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆட்டோ ஓட்டும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் நடிகை அனுமோல் பேசுகையில்,
குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஆபத்தான சூழலிலும், இரவு பகல் பாராமல் ஆட்டோ ஓட்டுவது என்பது சாமான்யமான விஷயமல்ல என்று குறிப்பிட்டார். குடும்பத்திற்காக உழைப்பதோடு மட்டுமல்லாமல், பெண்கள் சொந்தக் காலில் நின்று தங்களின் சுயமரியாதையையும் சுய அடையாளத்தையும் தக்கவைத்துக் கொள்வது மிகவும் பாராட்டுக்குரியது என்றார். சமூகத்தில் அனைவரும் சமம் என்று குறிப்பிட்ட அவர், பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதோடு ஆரோக்கியம் மற்றும் கல்விக்கான வாய்ப்புகளையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பெண்கள் தங்களை நிறத்தாலோ, உருவத்தாலோ அல்லது மொழியாலோ யாராவது சிறுமைப்படுத்த முயன்றால், அதை எவ்விதக் கோபமும் இன்றிப் பொறுமையுடன் புறந்தள்ளிவிட்டு, தங்களின் லட்சியத்தை நோக்கி மன உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்று உருக்கமாக அறிவுறுத்தினார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் தொடர்ச்சியாக,
நடிகை அனுமோல் அங்கிருந்த ஒவ்வொரு பெண் ஆட்டோ ஓட்டுநரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, அவர்களின் குடும்பச் சூழ்நிலைகள் குறித்தும் மிகவும் விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு பயனடைந்த பெண் ஆட்டோ ஓட்டுநரான பவானி மேடையில் பேசுகையில்,
தங்களுக்கு இதற்கு முன்பாகப் பல தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாலும், தங்களின் அன்றாடத் தொழில் தேவைகளைத் துல்லியமாக அறிந்து இன்சுலேட்டட் வாட்டர் பாட்டில்கள், தரமான நாப்கின்கள், பவர் பேங்க்கள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதை வாழ்நாளில் மறக்க முடியாது என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தங்களுக்குச் சுவையான உணவளித்து இவ்வளவு கண்ணியமாகத் தங்களைக் கௌரவித்த நடிகை அனுமோலுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.