இயற்கைக்கு முரணான பாலியல் உறவு, தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறி, உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கைக்கு, எதிரான சட்டப் பிரிவு 377 ஐ, ரத்து செய்தது, உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் படி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை. ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்துதல் குற்றமாகும். இதை முன் மொழிந்து பல படங்கள் வெளியான நிலையில், தமிழில் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ உருவாக்கப்பட்டுள்ளது.
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ திரைப்படம், ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் 28ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தினை ‘சூழ்’ படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கிறார். நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார்.
கடலோர கிராமத்தில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர், நிரஞ்சனா நெய்தியார். இவருடைய கிராமத்து மக்களின் வாழ்க்கையினை ஆவணப்படுத்துவதற்காக வருகிறார், ஸ்ருதி பெரியசாமி. ஒரே வீட்டில் தங்கும் இவர்களிடையே காதல் உருவாகிறது. இதை தெரிந்து கொள்ளும் நிரஞ்சனா நெய்தியாரின் தந்தை, அவருக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ஆபாசமில்லாத ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ படத்தின் கதை.
இயக்குநர் ஜெயராஜ் பழனி, காதலுக்கு எப்படி ஜாதி, மதம் பேதமில்லையோ, அதேபோல் பாலின பேதமும் இல்லை என்று வாதிடுகிறார். மேலும், ஆண், பெண் எதிர் பாலினத்தவர் மேல் கொள்ளும் காதல் போல், தன் பாலினத்தவர்கள் மீது காதல் கொள்வது இயற்கையானது, என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் இருவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்ற சரியான தேர்வு. பயந்த, தைரியமான சுபாவம் கொண்ட பெண்களாக, தங்களது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ ஆழமாக சொல்லப்படாத, அமெச்சூர் அட்டெம்ப்ட்!