‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர், ஏ.ஆர்.கே.சரவணனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், வீரன். சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், அனிதா ராஜ், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே, சினிமா ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு வீரன் படத்திற்கும் இருந்தது. வீரன் அதை பூர்த்தி செய்ததா?
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அப்பா, அக்காவுடன் வாழ்ந்து வரும் ஆதியை, பள்ளி விட்டு வரும் வழியில் மின்னல் தாக்குகிறது. சுய நினைவை இழந்த ஆதி, அந்த மின்னல் தாக்குதலில் இருந்து மீண்டுவர மிகவும் கஷ்டப்படுகிறார். நீண்ட சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைகிறார். அதற்கு பிறகு அவரது உடலில் மின்சார சக்தி உருவாகிவிடுகிறது. இதன் மூலம் ஒருவரை தாக்கவும், மனதினை வசியப்படுத்தும் சக்தியையும் பெற்றுவிடுகிறார். இந்த சக்தி கிடைத்த பின்னர், அவர் ஊரில் மிகப்பெரிய மின்சார விபத்து ஏற்பட்டு அந்த கிரமமே அழிவது போல் கனவு வருகிறது. இதை தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கும் போது வினய் நிஜமாகவே அப்படி ஒரு திட்டத்தை தொடங்குகிறார். அதை தடுக்கும் ஆதிக்கும் வினய்க்கும் மோதல் உருவாக, இதன்பிறகு என்ன நடந்த்து என்பது தான், வீரன்.
தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வந்த ஆதி, இந்தப்படத்திலும் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். படத்தின் முதல் பாதி சற்று சுவாரசியமாக சென்றாலும், இரண்டாம் பாதி போரடிக்கிறது. இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன், இந்தப்படத்தினை குழந்தைகளுக்காக உருவாக்குவதா, இல்லை பெரியவர்களுக்காக உருவாக்குவதா என்பதில் குழம்பியிருப்பது திரைக்கதையில் தெரிகிறது. அதே போல் சாமி இருக்கிறதா, இல்லையா? என்ற சர்ச்சைக்கும் சரியாக விடை சொல்லாமல், தவிர்த்து விட்டார்.
‘வீரன்’ என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஆதிக்கு பொருந்தவில்லை. சூப்பர் ஹீரோவுக்கான சண்டைக்காட்சிகள் இல்லாதது, படத்தின் பெரும் பலவீனம். குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி.
கதாநாயகியாக நடித்திருக்கிறார், அறிமுக நடிகை ஆதிரா ராஜ். ஒரு சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.
ஆதியின் நண்பராக நடித்திருக்கும் யூடியூபர் சசி, அவரது ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார்.
காமெடி என்ற பெயரில் முனீஷ் காந்த், காளி வெங்கட் இருவரும் படுத்தி எடுக்கிறார்கள்.
டெரராக சித்தரிக்கப்பட்ட வினய், க்ளைமாக்ஸில் கோமாளியாக்கப் பட்டிருக்கிறார்.
தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறது.
ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் தேறவில்லை! திருவிழா பாட்டு உணர்ச்சியற்று இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம்.
‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண், வீரன் படத்தில் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். க்ஷ் காட்சிகளின் நீளமும், இழுவையான திரைக் கதையும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
வீரன் – ஆக்ஷனும் இல்லை! காமெடியும் இல்லை!