‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ – விமர்சனம்!

ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, ரேணுகா, பாக்யராஜ், விஜி சந்திரசேகர், மதுசூதன் ராவ், தமிழ், நரேன், சிங்கம்புலி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். வெடிக்காரன் பட்டி சக்திவேல் தயாரிப்பில், தனது ட்ரேட் மார்க் ‘சாதி’ யப்பின்னணியில், இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கிறார்.

பல கோடிகளுக்கு சொந்தக்காரர், பாக்யராஜ். இவருடைய தங்கை சித்தி இத்னானி. பக்யராஜ் மறைவுக்கு பின் அந்த சொத்துக்களை அபகரிக்க, சித்தி இத்னானியின் முறை மாமன்களும் அவர்களது மொத்த குடும்பமும் சதி செய்கிறது. இதில் ஆர்யா சித்தி இத்னானிக்கு துணையாக இருக்கிறார். இதனால் இருதரப்புக்கும் மோதல் உருவாகிறது. இதற்கு பிறகு என்ன நடந்த்து என்பதே, ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் கதை.

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் மொத்தம் 11 சண்டைக்காட்சிகள். படத்தினை முத்தையா இயக்கினாரா? இல்லை சண்டை இயக்குநர் இயக்கினாரா? என்பதே படம் பார்க்கும் அனைவரின் கேள்வியாக இருக்கும். ஆர்யாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை! படம் முழுவதும் சண்டைக்காட்சிகள். கிடைத்த சிலகாட்சிகளில் நடித்திருக்கிறார்.

சித்தி இத்னானியின் ஆரம்பக்காட்சிகள் பில்டப்பாக இருந்தாலும், அதற்கு பிறகு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை.

பிரபு, ரேணுகா, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர், சிங்கம்புலி, தமிழ் என நடிகர்களின் கூட்டம் ஏராளம். இதில் பிரபு மனம் கவர்கிறார். இவரது மனைவி ரேணுகா, சிங்கம்புலி, சித்னானி இன்னும் சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் வன்மம், வக்ரம், துரோகம் கொண்ட கொடிய அரக்கர்களாகவே, இயக்குநர் முத்தையாவால் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் முத்தையா, தனது முந்தைய படங்களின் வரிசையில், இந்தப் படத்தினையும் இயக்கியிருக்கிறார். எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய படங்களை விட ஆம்பள, பொம்பள எல்லாத்தையும், இன்னும் கொடிய அரக்கர்களாக சித்தரித்து மட்டுமே புதுசு.

வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் மட்டுமே படத்தின் பலம்.

குழப்பமான திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும் இடையே அடிக்கடி வரும் சண்டைக்காட்சிகள் நிறைந்த படமே, ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’