வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
முதலாவதாக வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜோதிமுருகன், “ஐசரி கணேஷ் நினைத்திருந்தால் தன் குடும்ப அளவில் நட்டுமே தன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கலாம். ஆனால், எதையுமே வித்தியாசமாக, பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர். எந்த தொழிலை வேண்டுமானால் அவர் நடத்தியிருக்கலாம், ஆனால் பாரதியாரின் வார்த்தைகளின் படி, கல்விச்சேவை செய்ய வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி தற்போது 25000 மாணவர்கள், 5000 ஆசிரியர்களாக உயர்ந்துள்ள தன் பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உடன் கொண்டாட வேண்டும் என்று விரும்பியதன் விளைவு தான் இந்த வேல்ஸ் குடும்ப விழா. நான் 1973ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஏஎஸ் பிரகாசம் அவர்கள் எம்ஜிஆர், சிவாஜி போல கமல்ஹாசன் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அப்போதே சொன்னார். அதை மெய்ப்பிக்கும் விதமாக 45 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்து வருகிறார் கமல்ஹாசன். திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வரும் கமல், சமூகத்தில் முடிசூடிய மன்னராக வர வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
ஐசரி கணேஷ் அண்ணன் அவர்களை எப்போதுமே நான் பிரமாண்ட நாயகன் என்று தான் அழைப்பேன். அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஒரு நண்பனாக எனக்கு தெரிவது, திருக்குறளில் வரும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்ற குறளுக்கு ஏற்றார்போல வாழ்ந்து வருபவர் அண்ணன் டாக்டர் கணேஷ். இந்த 25 வருடங்களில் அவரின் அசுர வளர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் வாழ்ந்து, கடந்து வந்த பாதையை இன்றும் மனதில் வைத்திருக்கிறார். கமல் சாருடன் பிஸினஸ் கிளாஸ் விமானத்தில் இரண்டு முறை பயணிக்கும் வாய்ப்பும், நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அப்போது நீங்கள் அவ்வளவாக படிக்கவில்லையே, எப்படி இந்த அளவுக்கு அறிவாற்றலோடு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தினமும் புத்தகம் படிப்பேன் என்று சொன்னார். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் தீவிர வாசிப்பாளர் என்று. நிர்வாகம் சரியாக செயல்பட்டால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது, இந்தியாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இந்தியாவில் இருப்பது தான் எனக்கு பெருமை. கமல், ஐசரி கணேஷ் இருவருமே தனித்துவமாக சிந்திப்பவர்கள், தன்னம்பிக்கையோடு பருந்தை போல பறக்கக் கூடியவர்கள். அவர்களை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்றார் கௌரவ விருந்தினர் சேவியர் பிரிட்டோ.
வேல்ஸ் குடும்ப விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வளாகத்தில் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு நானும், என் மனைவியும் பேசிக்கொண்டிருந்த போது, கமல் சாரை அழைக்கலாம என நினைத்தோம். அவரை கேட்டபோது உடனடியாக வருகிறேன் என ஒப்புக் கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அக்டோபர் 7ஆம் தேதி ரெட் அலர்ட் இருக்கிறது, விழா எப்படி நடக்கும் என்று சிலர் கேட்டார்கள். மழை வந்தாலும் வேல்ஸ் குடும்ப விழா சீரும் சிறப்புமாக நடக்கும் என்று சொன்னோம். அதற்கு வழிவிட்ட வருப பகவானுக்கு நன்றி. கமல்ஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. என் மீது அதிக அக்கறை கொண்டவர். என் தந்தை ஐசரி வேலன் குடும்ப விழாவுக்கு, சிங்கார வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சினிமாவையும் தாண்டி, நல்ல பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது. அடுத்த கட்டத்தை நோக்கியும் அது போய்க் கொண்டிருக்கிறது. தற்போது இரண்டு வண்ண பறவைகள் வேறு வேறு திசையில் பயணித்து வருகின்றன, அவை இணைந்து பயணித்தால் அது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக மாறும் என்று ஏற்புரை வழங்கினார் விழா நாயகன் ஐசரி கணேஷ்.
இது நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம். வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன். கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அவர்கள் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார். இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான். டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள், எங்கள் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன். நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிறேர்களே என்கிறார்கள். எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன் என்றார் சிறப்பு விருந்தினர் உலக நாயகன் கமல்ஹாசன்.
விழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.