வெங்கட் பிரபு – யுவன் ஜோடியுடன் சுதா கொங்கரா! ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் திரையுலகில் இசைக் குடும்பத்தின் அடுத்த வாரிசாக, இசைஞானி இளையராஜாவின் தம்பி மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ராஜாஸ் பிளேலிஸ்ட்” (Raja’s Playlist) திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

எலிஃபன்டைன் எக்ஸ் (Elephantine X) நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் டாப் கிரியேட்டர்கள் பலர் ஒன்றிணைந்துள்ள இந்த மியூசிகல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம், தற்போது தனது அடுத்த கட்டமான பின்-தயாரிப்பு (Post-Production) பணிகளில் செம்ம ஸ்பீடாகக் களம் இறங்கியுள்ளது. ஆர்.டி. பாஸ்கர் குடும்பத்தின் மீதான தங்களின் ஆழமான நட்பை நிரூபிக்கும் வகையில், கோலிவுட்டின் உச்ச நட்சத்திர கிரியேட்டர்கள் இந்த ஒரே படத்தில் கைகோர்த்துள்ளது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.டி. பாஸ்கருடனான அந்த நீண்டகால நட்பின் அடையாளமாக இத்திரைப்படத்தைத் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். எப்போதுமே ரசிகர்களின் பல்ஸை நன்கு அறிந்த இயக்குநர் வெங்கட் பிரபு இத்திரைப்படத்திற்கு கதையமைக்க, அவரது தம்பியும் இசை இளவரசனுமான யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இவர்களுடன் அசைக்க முடியாத முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் (Creative Producer) பொறுப்பேற்று படத்திற்கு அசாத்திய பலம் சேர்த்துள்ளார். ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் பாராட்டுக்களைப் பெற்ற ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்ரமணியம், வெங்கட் பிரபுவின் கதையைத் தழுவி திரைக்கதை எழுதி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது குறித்துத் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் நெகிழ்ச்சியுடன் பேசுகையில்,

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பது தங்கள் ஒட்டுமொத்தக் குழுவிற்கும் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மனநிறைவான ஒரு தருணம் என்று குறிப்பிட்டார். ஒரு அழகான கதையை உருவாக்கப் படக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர் என்றும், ஜெயன் தனது அறிமுகப் படத்திற்காகத் தனது அசாத்திய உழைப்பைத் தந்துள்ளதால் ரசிகர்கள் அவரை மனதாரக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு முழுமையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். தற்போது பின்-தயாரிப்பு பணிகள் மிகத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாகவும், குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் இசையின் ஆற்றலைக் கொண்டாடும் ஒரு தரமான திரைப்படமாக இதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் பகிர்ந்து கொண்டார்.

இத்திரைப்படத்தில் புதுமுக நாயகன் ஜெயனுடன் இணைந்து சோனா ஒலிகல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லக்ஷ்மி, பிரகதீஸ்வரன் பூபாளம், இந்துமதி, ரேஷ்மி, ரஜினாத், ராம்குமார், மீனா மற்றும் திலகவதி உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் முழு படப்பிடிப்பும் முற்றுப்பெற்றுள்ள நிலையில், யுவனின் மனதை வருடும் பாடல்களுக்கான இசைக்கோர்ப்பு, எடிட்டிங் மற்றும் கலரிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பப் பின்-தயாரிப்பு பணிகள் ஸ்டுடியோக்களில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.