Cast : Vijay sethupathi, Soori, Manju Warrier, Kishore, Anurag Kashyap, Ken Karunas, Rajeev Menon, Gautham Vasudev Menon, Bose Venkat, Bhavani Sre, Vincent Ashokan, Chetan
Direction : Vetrimaaran
Music : Ilaiyaraaja
Production : RS Infotainment – Elred Kumar
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், பவானி ஸ்ரீ ,ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட்,சேத்தன் , வின்சென்ட் அசோகன்உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘விடுதலை – பாகம் 2’ படத்தினை இயக்கியிருக்கிறார், வெற்றிமாறன். இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட்’ சார்பில், எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.
‘விடுதலை’ முதல் பாகத்தில் கைது செய்யப்பட்ட பெருமாள் என்ற பள்ளிக்கூட வாத்தியார், போராளியானது எப்படி? ஏன், அவர் போராளியானார்? அவர் விடுவிக்கப்பட்டாரா, இல்லையா? என்பது தான், ‘விடுதலை – பாகம் 2’.
‘விடுதலை’ முதல் பாகத்தில், காவல் துறை, ‘பெருமாள் வாத்தியார்’ தேடுதல் வேட்டையின் போது, மலைவாழ் மக்கள் மீது நடத்திய அச்சுறுத்தல்கள், பாலியல் அத்துமீறல்களை காட்சிப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறன், ‘விடுதலை – 2’ பாகத்தில் அரசு இயந்திரம் செயல்படும் விதம், அதை ஆட்டுவிக்கிற அதிகார வர்க்கத்தினை இயல்பாக, உண்மைக்கு நெருக்கமாக காட்சிப் படுத்தியிருக்கிறார். காலகாலமாக பண்ணை அடிமைகளாக இருந்த மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் போராடி, உழைப்புக்கேற்ற ஊதியம், பல வகையான விடுமுறை, பண்டிகைக்கால போனஸ் என, கம்யூனிஸ்ட் மக்கள் தொண்டர்கள் தன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்தவர்களை, இன்றைய தலைமுறையினருக்கு நினைவு படுத்தியிருப்பது சிறப்பு.
மக்கள் படைத் தலைவர், காதலர், கணவர் என விஜய் சேதுபதி, கருப்பன் என்ற பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில், ரசிகர்களிடம் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறார்.
கம்யூனிசவாதியாக விஜய் சேதுபதியுடன் பயணிக்கும், புரட்சிப்பெண்ணாக மஞ்சு வாரியர், அவரது கதாபாத்திரத்தினை சிறப்பாக்கியிருக்கிறார். பெண்கள் அழகாக கருதும் தலைமுடி குறித்த வசனங்கள் சிறப்பு!
முதல் பாகத்தில் மாஸ் காட்டிய சூரி, குமரேசன் கதாபாத்திரத்தை இந்த பாகத்தில் மேலும் சிறப்பானதாக ஆக்கியிருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் இடம் பெறும் வசனங்கள் சூப்பர்! க்ளைமாக்ஸ் காட்சியில், ஜீப்பை அந்தரத்தில் தொங்கவிட்டு விட்டு, அசால்ட்டு பார்வை பார்த்தபடி காடுகளுக்குள் மறையும் காட்சியில், தியேட்டரில் விசில் பறக்கிறது!
மூத்த கம்யூனிஸ்ட்டாக நடித்திருக்கும் கிஷோர், அனுராக் காஷ்யப், கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன், போஸ் வெங்கட், வின்செண்ட் அசோகன் என அனைவரும் கதாபாத்திரத்தினை உயர்த்திப்பிடித்திருக்கிறார்கள்.
தலைமைச் செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், அல்ட்டி மேட். அசால்ட் செய்திருக்கிறார். அரசியல், அரசு இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதை தனது சிறப்பான நடிப்பினால் வெளிப்படுத்திய விதம் சூப்பர். அமைச்சர் இளவரசும் இவருடனான காட்சிகளில் கலக்கியிருக்கிறார்.
கென் கருணாஸ் நடிப்பு, சிறப்பு.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுமார்! ஆனால், படம் முழுவதும் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்தை வேகப்படுத்துவதுடன், காட்சிகளை மேம்படுத்துகிறது. குறிப்பாக, கென் கருணாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளில், திக் திக் ஏற்படுத்துவதற்கு பின்னணி இசையே பிரதாணம்!
ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு சிறப்பு! இயக்குநர் வெற்றிமாறனின் கற்பனைக்கு உயிரூட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராமர், கலை இயக்குநர் ஜாக்கி, சண்டைப் பயிற்சியாளர்கள் பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா மற்றும் பிரபு ஆகியோர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
பல நாடுகளின் கூட்டுச்சதியால், உலகத்திலேயே எந்த நாட்டு மக்களுக்கும் நடந்திடாத துயரங்களை சந்தித்தவர்கள் ஈழ மக்கள். அவர்கள் குறித்த ஒரு சம்பவமும் இதில் நினைவுபடுத்தப்படுகிறது. இப்படி, வெவ்வேறு வடிவங்களில் நடந்து கொண்டிருக்கும் எளிய மக்களுக்கு எதிரான அடக்குமுறை, வன்முறை என அனைத்தையும் ஒருங்கிணைத்து தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களையும் சொல்லியிருப்பது சிறப்பு!
‘தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது’.
என்ற வசனம், இருந்த தலைவர்களையும், வரும் தலைவர்களையும் நினைவூட்டுவது, சிறப்பு! இயக்குநர் வெற்றிமாறன், தனது ஆழமான வசனங்கள் மூலம் படம் முழுவதும் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறார்.
பெருமாள் வாத்தியாரின் (விஜய் சேதுபதி) தியாகத்திற்கு பிறகு வெகுண்டெழும் குமரேசனாக (சூரி) இளைஞர்கள் சாதூர்யமாக செயல்படவேண்டிய காலம்!
‘விடுதலை – பாகம் 2’ பிரச்சார படமாக இருந்தாலும், போரடிக்கவில்லை! தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பதால், அவசியம் பார்க்கவேண்டிய படம்!