மாஸ்டரை போல ‘கபடதாரி’ வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், கவலுதாரி என்ற கன்னட படத்தின் மறு உருவாக்கமே. ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ( கவலுதாரி படத்தின் இயக்குனர் ) ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

கபடதாரி’ டிரைலர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்  வெளியாகிறது.

பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில்  கலந்துகொண்ட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது

 “தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய் நட்சத்திரன் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார். இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. ‘மாஸ்டர்’ போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும், பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும்.  இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.