விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’அக்டோபர் 16 வெளியீடு!

Vijay Antony's 'Appa Kutty' Directed by Mu Maran to Release Worldwide on October 16, 2026

விஜய் ஆண்டனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறன் அழுத்தமான இயக்கத்தில், ஆக்‌ஷன் கலந்த முழுமையான குடும்பக் கதையாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

ஒரு பாசமுள்ள தந்தைக்கும் அவரது மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் நகர்கிறது. விஜய் ஆண்டனி தனது வழக்கமான பாணியில் இருந்து மாறி, இதில் மிகவும் உணர்வுப்பூர்வமான தந்தை கதாபாத்திரத்திலும், அதே நேரத்தில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்துத் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

குடும்ப உணர்வுகள், பாசம் மற்றும் சுவாரசியமான திருப்பங்கள் என அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான இப்படத்தின் செகண்ட் லுக் (Second Look) போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் ஒரு சிறுமி  இடம்பெற்றிருந்த காட்சி, இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஏற்கனவே பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் போஸ்ட் புரொடக்‌ஷன் (Post-production) பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 16 வெளியீட்டை முன்னிட்டுப் படக்குழுவினர் விரைவில் பிரம்மாண்டமான விளம்பரப் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லித்தன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்து குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணாறு ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீனா, ஹரிதா, ஹரிப்ரியா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக் கால விடுமுறையை ஒட்டி வெளியாகும் விஜய் ஆண்டனியின் இத்திரைப்படம் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.