திருநங்கைகளின் உலக சாதனை ஓவியத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி!

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.  இந்த மாபெரும் நிகழ்ச்சியை ‘அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்ற அமைப்பு நடத்தியது.

7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து ‘Wonder Book of’ உலக சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்து நடிகர் விஜய் சேதுபதி திருநங்கைகளை ஊக்குவித்தார்.

இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனு ஶ்ரீ, ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம்.

சமூக மக்களுக்கு திருநங்கைகள் குறித்த பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.