யூகி – விமர்சனம்!

UAN Film House நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜதாஸ் குரியாஸ், சிஜூ மேத்யூ, நாவிஸ் சேவியர், லவன் – குஷன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், ‘யூகி’. இப்படத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்தி, பவித்ர லக்ஷ்மி, ஆத்மீயா ராஜன், ஜான் விஜய், பிரதாப் போத்தன், நமோ நாராயன், முனீஸ்காந்த், வினோதினி, பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாக்கியராஜ் எழுதியிருக்கும் கதைக்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் ஸாக் ஹாரிஸ். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்க, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தினை 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எப்படி இருக்கிறது யூகி?

கயல் ஆனந்தி அழுதுகொண்டே ரோட்டின் ஓரமாய் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை காரில் வந்த மர்ம நபர் கடத்துகிறார். அதே சமயத்தில் பிரபல நடிகர் ஜான் விஜய் சுடப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் அரசியல் வட்டாரத்திலும், போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. நட்டி தலைமையில் ஒரு குழுவும், நரேன் தலைமையில் ஒரு குழுவும் கயல் ஆனந்தியை தேடுகிறார்கள். கயல் ஆனந்தி யார்? அவருக்கு என்ன நடந்து. அவர் கிடைத்தாரா, இல்லையா? ஜான் விஜய் ஏன் சுடப்பட்டார்.. என்பதே ‘யூகி’ படத்தின் யூகிக்க முடியாத திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

கயல் ஆனந்தியின் கதாபாத்திரம் அழுத்தமான கதாபாத்திரம். அதை துணிவுடன் ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். டாக்டர் வினோதினியிடம் கெஞ்சும் போதும், பின்னர் ஆக்ரோஷமாக சீறும் போதும் கதாபாத்திரத்திற்கு வலிமை கூட்டியுள்ளார். கணவனை தேடி அலையும் காட்சிகளில் பர்தாபத்தை ஏற்படுத்துகிறார்.

இடைவேளைக்கு முன்னர் நரேன், நட்டி இருவருக்குமான காட்சிகளில் இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இடைவேளைக்கு பின்னர் கதிர் திரை முழுவதினையும் ஆக்கிரமித்து கொள்கிறார். அவரை பற்றிய மர்ம முடிச்சுக்கள் அவிழும் போது சுவாரஷ்யம் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்கிறது. கதிர் கடைசியில் எடுக்கும் முடிவு பாலாவின் ‘சேது’ படத்தினை நினைவு படுத்துகிறது.

வெட்டி பந்தா பண்ணும் நடிகராக நடித்துள்ள ஜான் விஜய் கவனம் பெறுகிறார். டாக்டராக நடித்துள்ள வினோதினி, பவித்ரா லக்‌ஷ்மி, பிரதாப் போத்தன், நமோ நாராயணன், முனீஸ்காந்த் உள்ளிட்டவர்களும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

யூகி ஒரு சஸ்பென்ஸ் டிராமா. பல மர்ம முடிச்சுக்கள் இருந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதை சிலருக்கு அலுப்பினை ஏற்படுத்தலாம்! அதே சமயம் திரைக்கதையின் நடுவே சில குழுப்பங்களும் இருக்கிறது. தெளிவாக சொல்லியிருக்கலாம். இது படத்திற்கு பெரிய மைனஸ்!

பொறுமையாக பக்கத்தில் இருப்பவருடன் பேசாமலும், செல்போனை நோண்டாமலும் படம் பார்ப்பவர்களுக்கும், சஸ்பென்ஸ் டிராம படத்தினை விரும்பி பார்ப்பவர்களுக்கும் ‘யூகி’ பிடிக்கும்!

யூகி – யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்!