பேட்டைக்காளி – விமர்சனம்!

கலையரசன், கிஷோர், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, வேல.ராமமூர்த்தி, லவ்லின் சந்திரசேகர் , ஷீலா உள்ளிட்ட பலரது நடிப்பில், ‘ஆஹா’ இணையதளத்தில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ் ‘பேட்டைக்காளி’.  கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பாக இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த வெப்சீஸை ராஜ்குமார் இயக்கியிருக்கிறார்.

மதுரைக்கு அருகேயுள்ள சிவகங்கை மாவட்டத்தை சுற்றி இந்த வெப்சீரிஸின் கதைக்களம் அமைந்துள்ளது. பல பரம்பரைகளின் தொடர்ச்சியாக வழிவந்த பண்ணையாராக வேல.ராமமூர்த்தி. தாமரைக்குளத்தை சேர்ந்த இவரது பண்ணைகளில் விவசாய கூலிகளாக இருந்து வருபவர்கள், முல்லையூர் மக்கள்.

பண்ணையாருக்கும் , விவசாயகூலிகளுக்கும் ஏற்படும் நிலம் தொடர்பான பிரச்சனையில் அவர்கள் விரட்டியடிக்கப் படுகிறார்கள். கிஷோர் இவர்களுக்கு தலைவனாக இருந்து வழி நடத்தி வருகிறார்.

ஆண்டுதோறும் நடக்கும் ஜல்லிக்கட்டில் முல்லையூர் மக்கள் தங்களது மாடுகளை பிடிப்பதற்கு பண்ணையார் வேல.ராமமூர்த்தி தடை விதிக்கிறார். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சிறந்த மாடுபிடி வீரனான, கிஷோரின் அக்கா மகன் கலையரசன், இந்த தடையை மீறுகிறார். இதனால் கலையரசன் கொல்லப்படுகிறார். இது இரண்டு ஊர்களிக்கிடையே மேலும் பிரச்சனையை உருவாக்குகிறது.

இந்நிலையில் தாமரைக்குளத்தை சேர்ந்த ஷீலா தனது காளையை ஜல்லிக்கட்டில்  பங்குபெறச் செய்கிறார். அதை முல்லையூரினை சேர்ந்தவர்கள் பிடிக்க முயல்கிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘பேட்டைக்காளி’ வெப்சீரிஸ்.

மதுரையை ஆண்டுவந்த பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தின் சாதிய பாகுபாடுகள்,  அது தற்கால ஜல்லிக்கட்டிலும் எப்படிப்பட்ட சாதிய பாகுபாடுகளை, பிரிவினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் அது செயற்கை தனமாக அன்னியப்பட்டு நிற்கிறது. மனதை உலுக்கக்கூடிய சம்பவங்கள் இருந்தாலும் பெரிதாக ஒரு பதட்டமோ, வருத்தமோ எந்த காட்சிகளிலும் இல்லை.

கலையரசன் சிறப்பாக நடித்திருக்கிறார். கிஷோர் நடிப்பில் பெரிதாக குறை சொல்ல முடியவில்லை! வேல.ராமமூர்த்தி தனது வழக்கமான ஓவர் ஆக்டிங்கில் உற்சாகமாக நடித்திருக்கிறார். லவ்லின் சந்திரசேகரால் ரசிகர்களை எந்தவிதத்திலும் கவனப்படுத்த முடியவில்லை! ஷீலா கவனிக்க வைக்கிறார்.

‘பேட்டைக்காளி’ தலைப்பில் இருக்கும் டெம்பர் திரைக்கதையில் இல்லை. காட்சிகளுக்கேற்ற வசனம் இல்லாததும் பெரிய குறை.

இதை எல்லாவற்றையும் விட பின்னணி இசை மிகப்பெரிய பலவீனம்! உண்மையில் நடந்த சில ஜல்லிக்கட்டு போட்டிக் காட்சிகளை சாமார்த்தியமாக சேர்த்திருக்கிறார்கள். அது மட்டுமே உயிரோட்டமாக இருக்கிறது.

ஷீலா, மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி ஆகியோரின் வருகைக்கு பின்னர் இந்த வெப்சீரிஸ் கவனிக்க வைக்கிறது.

ஷீலாவின் பேட்டைக்காளி காளையை அடக்க முற்படும் முல்லையூரை சேர்ந்த மாடுபிடி வீரர்களை குத்தி, தூக்கி எரிகிறது! இதன் பின்னர் இந்த இரண்டு ஊர்களிக்கிடையே என்ன நடக்கிறது! என்பதை அடுத்தடுத்து பார்க்கலாம்!