ஜூன் போனால் ஜூலை காற்றே” என்கிற பாடல் வரியில் இருந்து ‘ஜூலை காற்றில் ‘என்பதை டைட்டிலாக வரித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கே.சி.சுந்தரம். அமரர் ஜீவாவின் மாணவர்.
பொதுவாக ஜூலையில் அடிக்கிற காற்று அம்மி கல்லையே தூக்கி வீசும் என்பது!
அந்தக் காலத்து மக்கள் சொலவடையாக ஆடிக்காத்திலே அம்மியே பறக்கும் என்பார்கள்.இங்கே பறக்கவிடுவது காதலை.!
காதலும் டேட்டிங்கும் எதிர்காலத்தில் சகஜமாகிவிடும் .பெண்ணைப் பெத்தவனே ‘எப்படிம்மா அந்தாளு..தோதுப்பட்டு வர்றானா?”என மகளைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பான் என்பதற்கு முன்னோட்டம்தான் இந்தப்படம்.
ஆனந்த்நாக் முதலில் அஞ்சு குரியனை காதலிக்கிறார். டேட்டிங் போகிறார்கள். எங்கேஜ்மென்ட் வரை வந்து “ம்ஹூகும் செட் ஆக மாட்டா”என கழன்று கொள்கிறார். அதே மாதிரிதான் சம்யுக்தா மேனனையும் அவரது அடுத்த டேட்டிங் ஷெட்யூலில் சேர்த்துக் கொள்கிறார். இவர்களுக்கு படுக்கையை பகிர்ந்து கொள்வது என்பது பல் தேய்த்து கொப்பளிப்பது மாதிரி.!பிரஷ் ஒன்னு.பேஸ்ட் பல பிராண்ட் ! யோவ் எப்படிய்யா இப்படியெல்லாம் அந்தரங்க சோலிகளை அலசி பப்ளிக்கில் காயப்போடுறீங்க?
ஆனந்த்நாக் பொறாமைக்குரிய ஆளு. பெருமூச்சு தான் விடமுடியிது.அனுபவிப்பதை எல்லாம் அனுபவித்து விட்டு எதனால் அஞ்சுவை செட் ஆகாது என்கிற முடிவுக்கு வந்தார் ,அவர் போட்டிருந்த கணக்கு என்ன? லவ்வர் பாய் என்கிற முகம் இவருக்கு இல்லை.ஒளிப்பதிவாளரின் கண்களில் இவரையும் அஞ்சுவை விட சம்யுக்தா மேனன் -ஆனந்தநாக் செம எக்ஸ்பிரஷன் ,இன்டிமேட் சீன்களில் ‘விகர்’ அண்ட் எரோடிக்.
வசனங்களால்தான் படத்தின் முக்காலே காலே அரைக்கால் பகுதி நகருகிறது. ஆங்கில படங்களின் பாதிப்பு. நம்ம ஊர் ஆளு “என்ன சார் பேசிட்டே இருக்காய்ங்க”ன்னு சொக்கிடுவாய்ங்க ! அடிக்கடி மியூசிக் டைரக்டர்தான் உசுப்பி விட வேண்டியதிருக்கும். டிமல் சேவியர் எட்வர்ட் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் தன்னையும் மறந்து போயிருக்கும் போல. நமக்கே லேகியம் சாப்பிட்ட எபெக்ட் !
நல்ல முயற்சி .தியேட்டருக்கு மக்களை கூட்டி வருமா? ஆதரவு கொடுங்க !