‘ஐ, நோபடி’ (I, Nobody)  –  விமர்சனம்!

ஒரு நிமிடம் உங்களை இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள். நீங்கள் வழக்கமாகப் போகாத ஒரு வங்கிக்குச் செல்கிறீர்கள். அங்கே திடீரென ஒரு துப்பாக்கிச் சூடு, ஒரு கொள்ளைச் சம்பவம். கொள்ளையர்கள் உங்களைப் பிணைக் கைதியாகக் கடத்தி, முகத்தை மூடி எங்கோ ஒரு இடத்தில் இறக்கிவிடுகிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் அந்தத் திருடர்கள் விபத்தில் இறந்துபோகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த 17 கோடி ரூபாய் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை.

இப்போது போலீஸின் மொத்தப் பார்வையும் உங்கள் மீது திரும்புகிறது. “தொடர்பே இல்லாத வங்கிக்கு நீ ஏன் போனாய்? ஊழியர்களிடம் எதுவும் கேட்காமல் ஏன் நீண்ட நேரம் அங்கே நின்றாய்?” என்று அவர்கள் கேட்கும் ஒற்றைக் கேள்வி உங்கள் கழுத்தை நெரிக்கிறது. போதாததற்கு, ஊடகங்கள் தங்கள் டிஆர்பி (TRP) ரேட்டிங்கிற்காக உங்கள் வாழ்க்கையை வைத்து ஒரு கற்பனைத் திரைக்கதையை ஒளிபரப்பத் தொடங்குகின்றன. உங்களைச் சுற்றி ஒரு பெரும் சிலந்திவலை பின்னப்படுகிறது. அது உங்கள் மொத்தக் குடும்பத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் தொடங்குகிறது. இதுதான் ‘ஐ, நோபடி’ படத்தின் ஒன்லைன். ஆனால், படம் இதை எப்படிச் சொல்கிறது. என்பதுதான் திரைக்கதை மேஜிக்!

இந்த வலையில் சிக்கிய சாமானியனாகப் பிரித்விராஜ் சுகுமாரன். படம் தொடங்கும்போதே கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழையும்போதே நம்மை யோசிக்கவும், சந்தேகிக்கவும் வைக்கிறார். கொள்ளையர்களிடம் சிக்கி, அடிபட்டு வீங்கிய கண்களோடு அவர் காட்டும் மௌனம், ஆயிரம் வசனங்களுக்குச் சமம். தன் இளைய மகளிடம் மட்டுமே மனம் திறந்து பேசும் ஒரு தந்தை, தனக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரு சாமானியனாகப் போராடும்போது தியேட்டரே பதறுகிறது. ஆக்ஷன் காட்சிகள் சற்றே மசாலாத்தனமாக இருந்தாலும், அதைத் தன் எதார்த்த நடிப்பால் நம்ப வைக்கிறார் பிரித்விராஜ்.

அவருக்கு இணையாக, முதுமை எட்டிப்பார்க்கும் எளிய தோற்றத்தில் வரும் பார்வதி திருவோத்து, தன் துல்லியமான முகபாவனைகள் மூலம் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியின் தவிப்பை இயல்பாகக் கடத்துகிறார். கொள்ளைப் பணத்தைத் தேடி அலையும் காவலராக வரும் ஹக்கிம் ஷாஜகானின் அந்த அமைதியான, மர்மமான முகம் படத்திற்குப் பெரும் பலம். அவர்களுடன் வரும் அசோகன், விஜயராகவன், மதுபால் மற்றும் ராஜீவனின் (ப்ரித்விராஜ்) மகள்களாக நடித்த சிறுமிகள் என யாருமே சும்மா வந்து போகவில்லை. தங்களின் சிறு சிறு உடல் மொழிகள் மூலமே திரைக்கதையின் பதட்டத்தை ஏணியில் ஏற்றி விடுகிறார்கள்.

எழுத்தாளர் சமீர் அப்துல் ஒரு ஆபத்தான குற்றச்சம்பவத்தை வெறும் பின்னணியாக வைத்துக்கொண்டு, ஒரு சாதாரண மனிதனின் குடும்பப் போராட்டத்தை நொடிக்கு நொடி திருப்பங்களுடன் எழுதியுள்ளார். ஒரு சிக்கலில் இருந்து நாயகன் தப்பித்துவிட்டார் என்று நாம் பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த நொடியே அவரை பெரிய ஆபத்தில் தள்ளி நம் இதயத் துடிப்பை எகிற வைக்கிறார்.

தினேஷ் புருஷோத்தமனின் கேமரா, சாலையின் பிரமாண்ட விபத்தை எப்படிக் காட்டியதோ, அதே நேர்த்தியுடன் பேருந்து, லிஃப்ட், ஒரு சிறிய அறை என அனைத்துச் சண்டைகளையும் மிரட்டலான கோணங்களில் படமாக்கியுள்ளது.

ஒளிப்பதிவின் மேஜிக்கை விட ஒருபடி மேலே சென்று, கதாபாத்திரங்களின் மன ஓட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு கோணங்களை ஒரே பார்வையில் தொகுத்து, சோர்வில்லாமல் காட்சிகளை நகர்த்தியுள்ளார் ரமீஸ் எம்.பி.

ஜேக்ஸ் பிஜாயின் இசை காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதோடு, அமைதியான மர்மச் சூழல்களின் சுவாரஸ்யத்தைக் குலைக்காமல் நம்மைப் பயமுறுத்துகிறது.

யானிக் பென் குழுவினர் சண்டைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனித்துவமான ரகத்தில் வடிவமைத்துள்ளனர்.

அதேசமயம் சண்டைக்காட்சிகளின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால், எழுத்தாளரின் புத்திசாலித்தனமான எழுத்து இன்னும் பிரகாசமாகத் தெரிந்திருக்கும். சில இடங்களில் வரும் அதிகப்படியான ஆக்ஷன் சற்றே சோர்வைத் தந்தாலும், திரைக்கதையின் அசுர வேகம் அதை மறக்கடித்து விடுகிறது.

குறிப்பிட்ட சில காட்சிகளில் மட்டும் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும் இயக்குநர்கள் மத்தியில், படம் தொடங்கிய முதல் பிரேம் முதல் க்ளைமாக்ஸ் வரை ஒட்டுமொத்தப் படத்தையுமே சீட் நுனியில் உட்கார வைத்து, நகம் கடிக்க வைக்கும் வித்தையைச் செய்துள்ளார் இயக்குநர் நிசாம் பஷீர்.

புத்திசாலித்தனத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த ‘ஐ, நோபடி’ ஒரு சிறந்த க்ரைம் த்ரில்லர்!