சென்னை கோடம்பாக்கம் , வடபழனி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துபவர்களின் பேசுபொருள் அரசியலை விட சினிமாவே அதிகமாக இருக்கும் . ஒவ்வொரு டீக்கடையிலும் எதிர்காலக் கனவுகளுடன் எத்தனையோ இளைஞர்கள் இன்றும் கூடி சினிமா பற்றிப் பேசுகிறார்கள் ; கனவுகளைப் பகிர்கிறார்கள் .. ஆனால் இப்படிப்பட்ட இளை ஞர்கள் டீக்கடையோடு பேசிக் கலைந்து சென்று விடக் கூடாது. அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்ட வேண்டும் என்று கவலைப்பட்டு உதயமானதுதான் ‘ டீக்கடை சினிமா ‘ அமைப்பு . இதன் தொடக்கப் புள்ளியை உதயகுமார் போட , கிருபாகரன் , நிஷாந்த் ,விவேக் ஆகியோரும் இணைந்து கை கொடுக்கவே அது நால்வர் அணியாக உருவாகியிருக்கிறது. இவர்கள் இம்முயற்சியை முன்னெடுக்கவே இப்போது ‘டீக்கடை சினிமா ‘ திரைக்கனவு சுமந்த 1000 பேர் கொண்ட அமைப்பாக மாறியிருக்கிறது .
“கைதட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே “என்கிற உணர்வோடு சக கலைஞர்களை ஊக்குவிக்க முனைந்த இந்த அமைப்பினர் சென்ற ஆண்டு சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளைவழங்கினர், இவ்வாண்டு சிறந்த குறும்படங்களுக்கு மட்டுமல்ல சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கவுள்ளனர்.
முறைப்படி நடுவர்களை வைத்தே இப்படிப்பட்ட படங்கள் , தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு என முப்பது விருதுகளை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது . சிறந்த திரைப் படங்களாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ , “‘மாநகரம்’ ,’அறம் ‘ , ‘அருவி’ , ‘ஒரு கிடா யின் கருணை மனு. ‘, ‘குரங்கு பொம்மை’ , ‘8 தோட்டாக்கள் ‘ ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களுக்கும் , குறும்படங்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வை R.G.எண்டர்டெயின்மென்ட் ,கிரிஷ் மீடியாவும் நிஷான் மீடியாவும் இணைந்து நடத்துகின்றன.
திரையுலகின் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கேற்கவுள்ள இவ்விழா வரும் 11.7.18 புதன் கிழமை சென்னை அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் உள்ள டைனஸ்டி ஹாலில் நடைபெறவுள்ளது